ஈரான் மீன்பிடி படகு பறிமுதல் தமிழக மீனவர்களிடம் விசாரணை
ஈரான் மீன்பிடி படகு பறிமுதல் தமிழக மீனவர்களிடம் விசாரணை
ADDED : மே 07, 2024 01:41 AM

கொச்சி, கேரள கடற்பகுதியில், சட்டவிரோதமாக நுழைந்த ஈரான் நாட்டு மீன்பிடி படகை, இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இப்படகில் இருந்த தமிழக மீனவர்கள் ஆறு பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள கடற்பகுதியில், மேற்காசிய நாடான ஈரானைச் சேர்ந்த மீன்பிடி படகு நேற்று முன்தினம் நம் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து அந்த படகை இந்திய கடலோர காவல்படையினர் தங்கள் ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் வாயிலாக சுற்றி வளைத்தனர்.
இதன்பின், கடலோர காவல்படையினர், அப்படகிற்குள் சென்று சோதனை நடத்தினர். படகின் உரிமையாளர் ஈரான் நாட்டைச் சேர்ந்த சையது சவுத் அன்சாரி என்பது தெரியவந்தது.
அவர், தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேரை, கடந்த மார்ச் 26ல் ஒப்பந்தம் செய்து ஈரான் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்க அழைத்துச் சென்றதாகவும், அவர்களை மிகவும் மோசமாகவும் நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதன் காரணமாக அவர்கள், படகில் ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வர முடிவு செய்ததாக கடலோர காவல்படையினரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்படகை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணைக்காக கொச்சிக்கு அனுப்பி வைத்தனர். தமிழக மீனவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.