பிரபல 'டிவி' நடிகர் மாயம்: கடத்தப்பட்டாரா என விசாரணை
பிரபல 'டிவி' நடிகர் மாயம்: கடத்தப்பட்டாரா என விசாரணை
ADDED : ஏப் 27, 2024 11:37 PM

புதுடில்லி: பிரபல 'டிவி' நடிகர் குருசரண் சிங், கடந்த நான்கு நாட்களாக மாயமான நிலையில், அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா என விசாராணை நடக்கிறது.
பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில், பிரபல டிவி நிகழ்ச்சியான தாரக் மேத்தா கா உல்டா சாஷ்மாவில் ரோஷன் சிங் ஜோதியாக நடித்து பிரபலமடைந்தவர் குருசரண் சிங், 50.
நான்கு நாட்கள்
டில்லியில் வசித்து வந்த இவரை, கடந்த நான்கு நாட்களாக காணவில்லை.
இது தொடர்பாக டில்லியில் உள்ள பாலம் போலீஸ் ஸ்டேஷனில், குருசரண் சிங்கின் தந்தை ஹர்கித் சிங் நேற்று புகாரளித்தார். அதில், 'கடந்த 22ல் டில்லியில் இருந்து மும்பை செல்வதாக கூறி, டில்லி விமான நிலையத்துக்கு என் மகன் குருசரண்சிங் சென்றார். ஆனால், அவர் மும்பை சென்று சேரவில்லை.
'அவரது மொபைல் போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நல்ல மனநிலையில் இருந்த அவர், கடந்த நான்கு நாட்களாக காணவில்லை.
'குருசரண் சிங்கை கண்டுபிடித்து தாருங்கள்' என, கூறியிருந்தார்.
இதையடுத்து, கடைசியாக அவர் சென்ற பாலம் இந்திரா காந்தி விமான நிலையத்திலும், குருசரண் சிங்கின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணை
அவருக்கான மும்பை விமானம் இரவு 8:30 மணிக்கு புறப்பட்ட நிலையில், விமான நிலையம் அருகில் இருந்த சாலையை குருசரண் சிங் இரவு 9:14 மணிக்கு கடந்து சென்றது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, அவர் வேறு எங்கும் சென்றாரா அல்லது கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

