UPDATED : செப் 02, 2024 03:20 PM
ADDED : ஆக 30, 2024 11:58 PM

புதுடில்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் பார்லிமென்ட் கூட்டு குழு, அது தொடர்பான ஆலோசனைகளை வழங்க பொதுமக்கள், நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, லோக்சபாவில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பியதால் உடனடியாக பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் ஆய்வுக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
பா.ஜ., மூத்த எம்.பி., ஜெகதாம்பிகா பால் தலைமையிலான, 31 பேர் அடங்கிய இந்த குழுவில் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் முதல் கூட்டம் ஏற்கனவே கூடிய நிலையில், நேற்று மீண்டும் இந்த குழுவின் இரண்டாவது கூட்டம் நடந்தது.
இதில், மும்பையைச் சேர்ந்த ஆல் இந்தியா சன்னி ஜாமியா துல் உலமா, டில்லியைக் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்தியன் முஸ்லிம் சிவில் உரிமை கழகம், உ.பி., சன்னி மத்திய வக்பு வாரியம், ராஜஸ்தான் முஸ்லிம் வக்பு வாரியம் ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இவர்கள் அனைவரும் வக்பு வாரிய சட்ட மசோதாவில் உள்ள ஷரத்துக்கள் குறித்தும், அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் தங்களது கோரிக்கைகளாக, பல கருத்துகளை முன்வைத்தனர்.
இந்த மசோதா மீதான தங்களது கருத்துகளை, பொதுமக்களும் தெரிவிக்க ஏதுவாக அரசு தரப்பில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இம்மசோதா குறித்த கருத்துகள், பரிந்துரைகளை, பொதுமக்கள், என்.ஜி.ஓ.,க்கள், நிபுணர்கள், நிறுவனங்கள் என, அனைத்து தரப்பினரும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை, வெளியிட்ட லோக்சபா செயலகம், 'எழுத்துப்பூர்வமாக தங்களது பரிந்துரைகளை அளிக்க விரும்புவோர், பார்லிமென்ட் கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கலாம்.
ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் இரண்டு நகல்களுடன் கூடிய அந்த பரிந்துரைகளை, 'இணைச்செயலர், லோக்சபா செயலகம், அறை எண் - 440 பார்லிமென்ட் ஹவுஸ் அனெக்ஸ், புதுடில்லி' என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
jpcwaqf-lss@sansad.nic.in என்ற இ - மெயில் முகவரிக்கும் தங்களது கருத்துகளை அனுப்பி வைக்கலாம். அடுத்த 15 நாட்களுக்குள் இவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.