அரசு இடத்தில் கட்டப்படும் சர்ச் ஹிந்து மக்கள் கட்சி புகார்
அரசு இடத்தில் கட்டப்படும் சர்ச் ஹிந்து மக்கள் கட்சி புகார்
ADDED : செப் 04, 2025 05:24 AM

துாத்துக்குடி: 'அரசு இடத்தில் அனுமதியின்றி சர்ச் கட்டும் பணி துவங்கி உள்ளது. அதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என, ஹிந்து மக்கள் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
துாத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் அருகே அரசுக்கும், காவல் துறைக்கும் சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் பல ஆண்டுகளாக புனித சிந்தா யாத்திரை சர்ச் உள்ளது. அந்த இடத்திற்கு பட்டா ஏதும் கிடையாது. பட்டா வழங்க வேண்டும் என கிறிஸ்தவ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்த சர்ச்சின் சில இடங்களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. எந்தவித அனுமதியும் பெறாமல் சர்ச் புதுப்பிக்கப்பட்டு வருவதாக ஹிந்து மக்கள் கட்சியின் மாநில செயலர் வசந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
புனித சிந்தா யாத்திரை சர்ச் அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது. நகரில் இதுபோல அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஹிந்து கோவில்கள் ஆட்சியாளர்களால் இடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தவித அனுமதியும் இல்லாமல் சர்ச் கட்டப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
மாவட்ட அமைச்சர் வாய்மொழி உத்தரவாக அனுமதி கொடுத்ததாக, சர்ச் நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படைத் தகுதி இருந்தால் மட்டும் எங்கு வேண்டுமானாலும் சர்ச் கட்டலாமா என ஹிந்து மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசின் அனுமதியுடன் சிந்தா யாத்திரை சர்ச் விரிவாக்கம் செய்யப்பட்டால், கடந்த 4 ஆண்டுகளில் ஹிந்துக்களிடைய கோவில்கள் எங்கெல்லாம் இடிக்கப்பட்டதோ, அந்த இடத்தில் எல்லாம், ஹிந்து கோவில்களை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.