வயநாட்டில் சுரங்கப்பாதை அவசியமா; நிலச்சரிவு அபாயம் இருப்பதாக நிபுணர் குழு எச்சரிக்கை!
வயநாட்டில் சுரங்கப்பாதை அவசியமா; நிலச்சரிவு அபாயம் இருப்பதாக நிபுணர் குழு எச்சரிக்கை!
ADDED : ஆக 18, 2024 12:04 PM

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு - வயநாடு இடையே திட்டமிடப்பட்டுள்ள இரட்டைவழி சுரங்கப்பாதை சரிந்து விழுந்து அபாயம் உள்ளதாக மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வயநாடு சம்பவம்
அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் நிலைகுலைந்து போன பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரட்டைவழி சுரங்கப்பாதை
இந்த நிலையில், வயநாடு மற்றும் கோழிக்கோட்டை இணைக்கும் விதமாக, ரூ.2,100 கோடியில் இரட்டைவழி சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் இந்த மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த இரட்டைவழி சுரங்கப்பாதையை கட்டினால், நிலச்சரிவால் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக மாநில நிபுணர் மதிப்பீட்டுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் குழு கடந்த ஜூன் மாதம் கூடி, இத்திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான, ஆய்வு அறிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தது.
அபாயம்
அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனக்கம்போயில் - கல்லடி - மேப்பாடி பகுதிகளை இணைத்து சுமார் 10 கி.மீ., தொலைவுக்கு இரட்டைவழி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுக்குழு சமர்பித்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்த சுரங்கப்பாதை அமையும் பகுதிகளில் ஒன்றான, திருவம்பாடி பஞ்சாயத்திற்குட்பட்ட 35.67 சதவீத பகுதிகள், மிதமான நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில், 26.54 சதவீத பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படும் என்றும். 0.96 சதவீத பகுதிகளில் ரொம்பவும் மோசமான பாதிப்பை ஏற்படும் சூழல் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
2019 நிலச்சரிவு
கடந்த 2019ம் ஆண்டு பெய்த கனமழையினால் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்ட புதுமலா கிராமம், இந்த சுரங்கப்பாதை அமையும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ளது.
கூடுதல் ஆவணங்கள்
சுரங்கப்பாதை அமையும் இந்தப் பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது; மழைக்காலங்களில் நிலச்சரிவு என்பது வாடிக்கையான ஒன்று. எனவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பட்சத்தில் பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக , வருவாய் அதிகாரி கையெழுத்து இடம்பெற்ற விரிவான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும், என நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.
கருத்து வேறுபாடு
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் இரட்டைவழி சுரங்கப்பாதை குறித்து வெளிப்படையாக கவலை தெரிவித்திருந்தார். ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சக கட்சி நிர்வாகியும், திருவம்பாடி எம்.எல்.ஏ.,வுமான லின்டோ ஜோசப் பதிலளித்துள்ளார்.