தனித்து விடப்பட்டு ஆதரவின்றி தவியாய் தவிக்கும் ஈஸ்வரப்பா!
தனித்து விடப்பட்டு ஆதரவின்றி தவியாய் தவிக்கும் ஈஸ்வரப்பா!
ADDED : ஏப் 12, 2024 05:48 AM

முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினருக்கு எதிராக கச்சை கட்டி நிற்கும், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தற்போது தனித்து விடப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் எடியூரப்பாவின் செல்வாக்கால், அரசியலில் வளர்ந்தவர் ஈஸ்வரப்பா. மாண்டியாவை சேர்ந்த எடியூரப்பா, பல்லாரியை சேர்ந்த ஈஸ்வரப்பா, ஷிவமொகாவில் நண்பர்களாக அறிமுகமாகினர். பா.ஜ.,வில் தலைவர்களாக வளர்ந்ததே பெரிய கதை. இவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலை ஒரே விதமாக இருந்தது. சங்க் பரிவார் பின்னணி கொண்டவர்கள்.
ஒரே ஸ்கூட்டர்
இருவரும் ஒரே ஸ்கூட்டரில் சுற்றி வந்து, கட்சியை பலப்படுத்தினர். எடியூரப்பா ஷிகாரிபுராவில், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பிரச்னைகளை பற்றி பேசி வளர்ந்தார். மற்றொரு பக்கம் ஷிவமொகாவில் ஈஸ்வரப்பா, ஹிந்துத்வாவை அஸ்திரமாக பயன்படுத்தி, அரசியலில் வளர்ந்தார். எடியூரப்பா லிங்காயத் தலைவராகவும், ஈஸ்வரப்பா குருபர் சமுதாய தலைவராகவும் அடையாளம் காணப்பட்டனர்.
ஷிவமொகாவில் எடியூரப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி, ஈஸ்வரப்பா வளர்ந்தார். இணை பிரியா நண்பர்களாக இருந்த இவர்கள் சேர்ந்து தொழில் செய்தனர்.
ஷிவமொகாவில், அரசியல் ரீதியில் வளர்ச்சி அடைந்த பின், இவர்களின் நட்பில் விரிசல் விழ துவங்கியது. ஒருவரை ஒருவர் பேச்சின் மூலமாகவே தாக்கினர். ஷிவமொகா பா.ஜ.,வை தங்கள் கைப்பிடியில் வைத்துக்கொள்ள, இருவருமே முயற்சித்தனர்.
நட்பில் விரிசல்
கடந்த 2008ன், லோக்சபா தேர்தலில் எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திராவை களமிறக்குவதற்கு, ஈஸ்வரப்பா பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இவர்களின் நட்பில் ஏற்பட்ட விரிசல், வெளிச்சத்துக்கு வந்தது.
எடியூரப்பாவை போன்று, ஈஸ்வரப்பாவும் பா.ஜ.,வில் முன்னணி தலைவராக உள்ளவர். கட்சி சேவை, தலைமை குணம், போராட்ட மனோபாவம், சங்க் பரிவாருடன் நல்லுறவு வைத்திருந்தார். நாக்கை கட்டுப்படுத்தாமல் வெட்டு, குத்து என, பேசி கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவார். சர்ச்சைக்குரிய வகையில் பேசினாலும், துறைகளை சிறப்பாக நிர்வகித்தார். இரண்டு முறை மாநில பா.ஜ., தலைவராகவும் இருந்தார்.
மாநிலத்தில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அரசில், முதன் முறையாக அமைச்சரானார். நீர்ப்பாசனத்துறை பொறுப்பை ஏற்றிருந்தார். 2008 - 2013 வரையிலான பா.ஜ., அரசில், மின்சாரம், கிராம வளர்ச்சி, வருவாய் அமைச்சராக பணியாற்றினார். ஜெகதீஷ் ஷெட்டர் அரசில், துணை முதல்வராக பதவி வகித்தார்.
இயலாமை
ஒரு காலத்தில், மாநிலத்தின் 224 சட்டசபை தொகுதிகள், 28 லோக்சபா தொகுதிகளில் கட்சியினருக்கு சீட் பெற்று தரும் அளவுக்கு வளர்ந்திருந்த ஈஸ்வரப்பாவால், தற்போது தன் மகன் காந்தேஷுக்கு சீட் பெற முடியாமல் இயலாமையில் தவிக்கிறார். ஹாவேரி தொகுதியில் தன் மகனுக்கு சீட் தரும்படி மன்றாடியும் பயனில்லை.
கொதித்தெழுந்த அவர், ஷிவமொகா தொகுதியில் ராகவேந்திராவை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக களமிறங்க தயாராகிறார். இவரை சமாதானம் செய்யும் முயற்சியை, கட்சி நிறுத்தி விட்டது. டில்லிக்கு சென்ற இவரை சந்திக்காமல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருப்பி அனுப்பினார்.
ஈஸ்வரப்பாவின் நிலை, தற்போது பரிதாபமாக உள்ளது. கட்சியில் தலைவர்கள் யாரும், இவருக்கு பக்கபலமாக நிற்கவில்லை. சில ஆதரவாளர்கள் மட்டும் உடன் நிற்கின்றனர். ஆனால் இவர்களும் எப்போது வேண்டுமானாலும், எடியூரப்பா பக்கம் சாயலாம். ஈஸ்வரப்பாவின் நிலை ஆயுதங்கள் இல்லாமல், படைகள் இல்லாமல் சக்கர வியூகத்தில் சிக்கிய அபிமன்யூ போல உள்ளது.
- நமது நிருபர் -

