விதிகளை மீறும் 'ட்ரோன்'களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடிவு
விதிகளை மீறும் 'ட்ரோன்'களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடிவு
ADDED : ஆக 20, 2024 11:38 PM
பெங்களூரு : ஒரு காலத்தில் ராணுவ செயல்பாடுகளுக்கும், ஆராய்ச்சிக்கு மட்டுமே ட்ரோன் எனும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது காலம் மாறிவிட்டது. திருமணம், காது குத்தல், பெயர் சூட்டல் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், யு டியூபர்களும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதற்காக, சந்தைகளில் 1,000 ரூபாய் முதல் மலிவு விலையில் ட்ரோன்கள் கிடைக்கின்றன. இதை பயன்படுத்தி, கண்ட இடங்களில் ட்ரோன்கள் பறக்க விடப்படுகின்றன.
ஆனால், ராணுவம், ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில், வி.வி.ஐ.பி.,கள் வசிக்கும் பகுதிகள் என குறிப்பிட்ட பகுதிகளில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள விமானப்படை தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் மீது, ஐந்து நாட்களுக்கு முன், ஒரு ட்ரோன் பறந்துள்ளது. இதை பார்த்து, விமானப்படை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து, ஜாலஹள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ட்ரோன் பறக்க விட்ட நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'தடை செய்யப்பட்ட பகுதியில் விதிகளை மீறி ட்ரோன் பறக்க விட்டால், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்று பெங்களூரில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு துறை ராணுவ பிரிவு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ட்ரோன் பறக்க விடுவதற்கு முன், 2021ல் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

