நடிகர் விஜய் படத்தயாரிப்பாளர் வீட்டில் ஐ.டி., ரெய்டு!
நடிகர் விஜய் படத்தயாரிப்பாளர் வீட்டில் ஐ.டி., ரெய்டு!
ADDED : ஜன 21, 2025 10:51 AM

ஹைதராபாத்: நடிகர் விஜய் படத்தயாரிப்பாளர் தில் ராஜூ வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர்.
வேலம்குச்சா வெங்கட ரமணரெட்டி என்ற இயற்பெயர் கொண்டவர் தில் ராஜூ. டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராகவும், முக்கிய விநியோகஸ்தராகவும் இருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரயேஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனமும் வைத்துள்ளார். தெலுங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழக தலைவராக கடந்த டிசம்பரில் தான் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில், இவரது வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவருக்கு சொந்தமான 8 இடங்களில் 55 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.
தில் ராஜூ சகோதரர் சிரிஷ், மகள் ஹன்சிதா ரெட்டி ஆகியாரது வீடுகளும் வருமானவரி சோதனைக்கு தப்பவில்லை. ரெய்டின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
பொங்கலுக்கு வெளியான கேம் சேஞ்சர் படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். சங்கராந்திக்கு ஒஸ்தானு என்ற படத்தையும் தயாரித்து இருக்கிறார். நடிகர் விஜயின் வாரிசு படத்தை தயாரித்ததும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.