'யு-டர்ன்' அடித்தது காங்கிரஸ் தான்... சொன்னீங்களே, செய்தீர்களா? திருப்பிக்கேட்கிறது பா.ஜ.,
'யு-டர்ன்' அடித்தது காங்கிரஸ் தான்... சொன்னீங்களே, செய்தீர்களா? திருப்பிக்கேட்கிறது பா.ஜ.,
ADDED : ஆக 26, 2024 07:10 AM

டில்லி: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்தாது ஏன்? என்று பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
ஓய்வூதியம்
கடந்த இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டமானது, மத்திய அரசு ஊழியராக, குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விமர்சனம்
மத்திய அரசின் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகவும், இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், இப்போது ஒருமித்த ஓய்வூதியம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
யு-டர்ன்
இந்த நிலையில், கார்கேவின் இந்த பேச்சு குறித்து பா.ஜ., மூத்த தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்து விட்டு, அதனை நிறைவேற்றாமல், காங்கிரஸ் தற்போது யு-டர்ன் அடித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது.
நிறுத்துங்க
மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பிரதமர் மோடி, மிகவும் கவனமாக முடிவு எடுப்பார். பிரியங்கா தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை, ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, அதனை நிறைவேற்றாமல் ராகுல் தற்போது மழுப்பி வருகிறார். இதுபோன்று செய்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

