ராஜினாமா ஏற்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்தால் மட்டுமே அது செல்லும்'
ராஜினாமா ஏற்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்தால் மட்டுமே அது செல்லும்'
ADDED : செப் 18, 2024 02:36 AM

புதுடில்லி ;கொங்கன் ரயில்வேயில் பணியாற்றிய மனோகரா என்பவர் தொடர்ந்த வழக்கில், ராஜினாமா ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்காததால், அவரை மீண்டும் பணியில் சேர்க்க உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கொங்கன் ரயில்வேயில், 1990ல் பணியில் சேர்ந்த மனோகரா என்பவர், 2013 டிச., 5ல் தன் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.
அது, 2014 ஏப்., 7ல் ஏற்கப்பட்டதாக கோப்புகளில் குறிப்பிடப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எழுத்து வாயிலாக மனோகராவுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, 2014 மே 26ல் தன் ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக மனோகரா கடிதம் எழுதினார். ஆனால், 2014 ஜூலை 1ம் தேதியில் இருந்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக பதில் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், பெங்களூரு உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, மனோகராவுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது.
அதே நேரத்தில் உயர் நீதிமன்ற அமர்வு, அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
அவர் ராஜினாமா செய்ததை ஏற்பதாக கோப்புகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், முறையாக எழுத்துப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, கொங்கன் ரயில்வே சார்பில் 2014 மே 19ல் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பணிக்கு வராத காரணத்தை தெரிவிக்கும்படி கூறப்பட்டது. அதை ஏற்று, அவரும் பணிக்கு திரும்பினார்.
இதில் இருந்து, அவருடைய ராஜினாமா ஏற்கப்படவில்லை என தெரிகிறது. அதனால், அவரை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்தால் மட்டுமே, ஊழியரின் ராஜினாமா ஏற்கப் பட்டதாக கருத முடியும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

