மூளை அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைகிறார் ஜக்கி வாசுதேவ்
மூளை அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைகிறார் ஜக்கி வாசுதேவ்
UPDATED : மார் 22, 2024 06:26 AM
ADDED : மார் 22, 2024 01:15 AM

புதுடில்லி: மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட, சத்குரு ஜக்கி வாசுதேவ், தற்போது குணமடைந்து வருவதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், பிரபல ஆன்மிக குருவுமான ஜக்கி வாசுதேவுக்கு கடும் தலைவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது மூளையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து டில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
அங்கு அவருக்கு பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வினித் சூரி தலைமையிலான நான்கு டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 17ம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர்.
இதனால் அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருவதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சையின்போது வென்டிலேட்டர் உதவியால் சுவாசித்த அவர், அறுவை சிகிச்சை முடிந்ததை தொடர்ந்து. வென்டிலேட்டர் அகற்றப்பட்டது. தற்போது விரைவாக குணம்அடைந்து வருவதாகவும், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனை படுக்கையில் படுத்தநிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், 'அப்போலோவில் உள்ள டாக்டர்கள், என் தலையில் உள்ள பிரச்னையை கண்டறிய அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால், எதுவும் இல்லை. மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நலமுடன் உள்ளேன்' என நகைச்சுவையுடன் பேசியுள்ளார்.

