ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் மதுரா கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் மதுரா கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
ADDED : ஆக 23, 2024 07:48 PM
மதுரா:ஜென்மாஷ்டமி நாளில் அதிக கூட்டம் உள்ள நேரத்தில் கோவிலுக்குள் செல்வதை தவிர்க்குமாறு மதுரா பாங்கே பிஹாரி கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பகவான் கிருஷ்ணர் பிறந்த நாளான ஜென்மாஷ்டமி வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள அனைத்து முக்கியக் கோவில்களிலும் அன்று கூட்டம் அலைமோதும். குறிப்பாக, பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவர்.
கடந்த 18-ம் தேதி ஆரத்தி முடிந்து கோவிலில் இருந்து வெளியே செல்லும்போது, வயது முதிர்ந்த பக்தர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். அதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஜென்மாஷ்டமி அன்று இரவு, மங்கள ஆரத்தி தரிசனத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஜென்மாஷ்டமி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரா பிருந்தாவனத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்குப் பின், கோவில் மேலாளர்கள் முனீஷ் சர்மா மற்றும் உமேஷ் சரஸ்வத் ஆகியோர் கூறியதாவது:
கோவிலில் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்கள் தனித்தனியாக இருக்கின்றன. எனவே, நுழைவு வாயில் அருகே செருப்புகளை விட்டு வந்தா, மீண்டும் அதை எடுக்க கூட்டத்தில் செல்ல வேண்டியிருக்கும். எனவே, வெளியே செல்லும் வழியில் செருப்புகளை விட்டு வந்தால், தரிசனம் முடுத்து திரும்பும் போது உடனே செருப்பை எடுத்துக் கொண்டு செல்ல முடியும்.
பக்தர்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை கொண்டு வந்து விடுவது நல்லது. மேலும், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல் உபாதை இருப்போர் கோவிலுக்குள் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். வெளியே காத்திருந்து, கூட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் உள்ளே வந்து சுவாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

