லட்சுமி ஹெப்பால்கர் மகனை தோற்கடிக்க ஜார்கிஹோளி சகோதரர்கள் அதிரடி வியூகம்
லட்சுமி ஹெப்பால்கர் மகனை தோற்கடிக்க ஜார்கிஹோளி சகோதரர்கள் அதிரடி வியூகம்
ADDED : ஏப் 02, 2024 10:33 PM

அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மகன் மிருணாளை தோற்கடிக்க, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, தன் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு பக்கபலமாக நின்றுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில், 'சீட்' மறுக்கப்பட்டதால், கோபமடைந்த ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசுக்குச் சென்றார். ஹூப்பள்ளி - தார்வாட் தெற்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். அதன்பின் இவரை காங்கிரஸ் எம்.எல்.சி.,யாக தேர்வு செய்தது.
மீண்டும் வருகை
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரசுக்கு 'டாட்டா' காண்பித்து மீண்டும் பா.ஜ.,வுக்கு திரும்பிய ஜெகதீஷ் ஷெட்டர், தார்வாட் தொகுதியில் சீட் எதிர்பார்த்தார். ஆனால் பிரஹலாத் ஜோஷிக்கு சீட் கிடைத்தது. அதன்பின், ஷெட்டரின் பார்வை பெலகாவி மீது பதிந்தது. விரும்பியபடியே இவருக்கு சீட் கிடைத்தது. குஷியுடன் பிரசாரத்தில் குதித்துள்ளார்.
அதிருப்தியாளர்களை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். இவரை எதிர்த்து அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள், காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவரை தோற்கடித்து, அவர் தாயின் மூக்கை உடைக்க வேண்டும் என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி திட்டம் வகுத்துள்ளார்.
கோகாக் எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி, அரபாவி எம்.எல்.ஏ., பாலசந்திர ஜார்கிஹோளியை நேரில் சந்தித்து, தனக்காக பிரசாரம் செய்யும்படி, ஜெகதீஷ் ஷெட்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விரண்டு தொகுதிகளிலும், தனக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால், எளிதில் வெற்றி பெறலாம் என்பது இவரது கணக்கு.
சகோதரர்கள் கூட்டம்
சகோதரர்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பாலசந்திர ஜார்கிஹோளி ஆகிய இருவரும் ரகசிய கூட்டம் நடத்தி, மிருணாளை தோற்கடிக்க வியூகம் வகுக்கின்றனர். எந்த வகையில் பிரசாரம் செய்தால், காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என, திட்டம் வகுக்கின்றனர்.
இதையறிந்த அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், கடந்த சில நாட்களாக கோகாக், அரபாவி தொகுதிகளில் மகனுக்காக பிரசாரம் செய்கிறார். சிக்கோடி தொகுதியில் காங்., வேட்பாளராக, பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா போட்டியிடுகிறார்.
பிரியங்காவை வெற்றி பெற வைக்கும் பொறுப்பை, லட்சுமி ஹெப்பால்கரிடமும்; இவரது மகனை வெற்றி பெற வைக்கும் பொறுப்பை சதீஷிடமும், காங்., தலைமை ஒப்படைத்துள்ளது. பா.ஜ.,வில் இருக்கும் தன் சகோதரர்களான ரமேஷ், பாலசந்திராவின் வியூகங்களை முறியடித்து, மிருணாளை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு சதீஷ் தலையில் விழுந்துள்ளது.
- நமது நிருபர் -

