ADDED : பிப் 23, 2025 11:14 PM

பெங்களூரு,: வாயை மூடிக்கொண்டு இருக்கும்படி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்டளையிட்டும், அதை மீறி கருத்து தெரிவிக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா மீது, காங்., டில்லி பிரதிநிதி ஜெயசந்திரா அதிருப்தி அடைந்துள்ளார்.
கர்நாடக காங்கிரசில் முதல்வர் மாற்றம் விஷயம் சர்ச்சைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி விழுந்தது. ஆனால் மாநில தலைவர் மாற்றம் சர்ச்சை சூடு பிடிக்கிறது.
அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா உட்பட பலரும் மாநில தலைவர் பதவி மீது 'கண்' வைத்துள்ளனர். அவ்வப்போது இது பற்றி ஊடகங்கள் முன்னிலையில் பேசினர். கட்சிக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர்.
அமைச்சர்களின் செயலால் கடுப்படைந்த, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'வாயை மூடி கொண்டு, உங்கள் வேலையை பாருங்கள். உங்கள் துறைகளின் பணியை கவனியுங்கள்.
'தேவையின்றி, முதல்வர் மாற்றம், மாநில தலைவர் மாற்றம் குறித்து, மனம் போனபடி பேசி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம். முதல்வர், மாநில தலைவரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மேலிடம் தீர்மானிக்கும்' என கண்டித்தார்.
கார்கேவின் சாட்டையடிக்கு பின், சில அமைச்சர்கள் மவுனமாகினர். ஆனால் ராஜண்ணா, மாநில தலைவர் பதவி குறித்து பேசுவதை நிறுத்தவில்லை. 'மாநிலத்தில் முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
மாநில தலைவர் மாறுவார். எனக்கு மாநில தலைவர் பதவி வழங்கினால், அமைச்சர் பதவியை விட்டுத்தர தயாராக இருக்கிறேன்' என நாள் தவறாமல் கூறுகிறார். இதனால் காங்., டில்லி பிரதிநிதி ஜெயசந்திரா கடுப்படைந்துள்ளார்.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எனக்கு தெரிந்தவரை, தற்போதைக்கு மாநில தலைவர் மாற்றம் இல்லை. இது குறித்து மேலிடம் ஆலோசிக்கவில்லை. அடுத்து வரும் தேர்தல்களுக்கு தயாராவதில், கட்சி ஆர்வம் காட்டுகிறது.
அனைவரும் வாயை மூடிக்கொண்டு இருங்கள் என, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். அவரது பேச்சை புரிந்து கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். கார்கேவின் எச்சரிக்கைக்கு பின், அனைத்து குழப்பங்களும் சரியாகிவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

