பிரகாஷ் ஜாவடேகருடன் சந்திப்பால் சர்ச்சை விளக்கம் தேவையில்லை என்கிறார் ஜெயராஜன்
பிரகாஷ் ஜாவடேகருடன் சந்திப்பால் சர்ச்சை விளக்கம் தேவையில்லை என்கிறார் ஜெயராஜன்
ADDED : ஏப் 30, 2024 02:10 AM

திருவனந்தபுரம், “பா.ஜ., மூத்த தலைவர் பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்தது அரசியல் சார்ந்தது அல்ல; நான் யாரையெல்லாம் சந்திக்கிறேன் என்பது குறித்து கட்சி தலைமைக்கு சொல்ல வேண்டுமா,” என, கேரளாவில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜெயராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஜெயராஜன் உள்ளார்.
இவர் சமீபத்தில் பா.ஜ., தலைவரும், கட்சிக்கான கேரள மாநில பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்ததாக புகார் எழுந்தது.
இந்த தகவலை வெளியிட்ட ஆலப்புழா பா.ஜ., வேட்பாளர் ஷோபா சுரேந்திரன், 'சொந்த கட்சியில் மிரட்டல் உள்ளதால், இடைத்தரகர் ஒருவர் வாயிலாக ஜெயராஜன் பா.ஜ.,வில் சேர திட்டமிட்டுள்ளார்' என தெரிவித்தார். இது, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியான காங்கிரசும் இந்த விவகாரத்தில் சி.பி.எம்.,மை குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், 'என் மகன் வீட்டில் நடந்த சில நிமிட சந்திப்பின்போது, ஜாவடேகருடன் அரசியல் எதுவும் பேசவில்லை' என, ஜெயராஜன் விளக்கமளித்தார்.
இது குறித்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஷோபா சுரேந்திரனின் பேச்சு அருவருக்கத்தக்க வகையில் உள்ளது.
இதற்கு முன் பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்ததும் இல்லை; தொலைபேசியில் பேசவும் இல்லை. என் மகன் வீட்டில் நடந்த சில நிமிட சந்திப்பில், அவருடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.
அப்படி இருக்கும் போது, அது குறித்து கட்சி தலைமைக்கு ஏன் தெரிவிக்க வேண்டும்? நான் யாரை சந்தித்து பேசினேன் என்பது குறித்து கட்சி தலைமைக்கு தெரிய வைக்க வேண்டுமா என்ன?
இவ்வாறு அவர் கூறினார்.

