சாதனைகளை சீர்குலைக்கும் முயற்சி தீர்ப்பில் நீதிபதி தத்தா விளாசல்
சாதனைகளை சீர்குலைக்கும் முயற்சி தீர்ப்பில் நீதிபதி தத்தா விளாசல்
ADDED : ஏப் 27, 2024 02:29 AM

புதுடில்லி, ''நம் தேசத்தின் வெற்றிகள் மற்றும் சாதனைகளை திட்டமிட்டு சீர்குலைக்கும் முயற்சிகளில், சில குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன,'' என, ஓட்டு இயந்திரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து, சந்தேகம் எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான தீபங்கர் தத்தா, தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக, சமீப காலங்களில் நம் தேசம் மிகப் பெரிய சாதனைகளை செய்து வருகிறது. அதை சிதைப்பதற்கென்றே சில குழுக்கள், சமீப காலமாக திட்டமிட்டு செயல்படுகின்றன.
நாட்டின் வளர்ச்சியை இழிவுபடுத்தி பலவீனமாக்கும் முயற்சியை, நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதுபோன்ற முயற்சிகளை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது.
மின்னணு ஓட்டுப்பதிவையும் தாண்டி, அடுத்த கட்ட தொழில்நுட்பத்தை தான் மக்கள் விரும்புவரே தவிர, மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு செல்வதை ஆதரிக்க மாட்டர். இந்த விவகாரத்தில் மனுதாரர்களின் நேர்மை மீதே எனக்கு சந்தேகம் உள்ளது.
எனவே தான், மனுதாரர்களுக்கு நல்ல நோக்கம் இல்லை என்ற தேர்தல் கமிஷனின் வாதத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
மின்னணு ஓட்டு முறை மீது மக்களுக்கு சந்தேகத்தை கிளப்பி, தேர்தல் நடைமுறையை சீர்குலைப்பதே, மனுதாரரின் நோக்கமாக உள்ளது.
மீண்டும் ஓட்டு சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்கு நீதிமன்றம் ஆதரவு அளிக்காது. சந்தேகம் மற்றும் யூகத்தின் அடிப்படையிலான மனுக்களை, இந்த நீதிமன்றம் ஊக்குவிக்காது.
இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

