டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்
டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்
ADDED : ஜூலை 17, 2024 01:40 AM

புதுடில்லி, டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, ஹைதராபாத் தொழிலதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகினார்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மாநில அரசின் மதுபான கொள்கையில், 2021 - 22ல் திருத்தம் செய்யப்பட்டது.
இதில் மோசடி நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., விசாரித்து வருகின்றன.
முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் அபிஷேக் போயின்பள்ளி கைது செய்யப்பட்டார்.
சிறையில், 18 மாதங்களுக்கு மேல் இருந்ததால், கடந்த மார்ச் மாதம் அவருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பண மோசடி வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அபிஷேக் போயின்பள்ளி தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள், சஞ்சிவ் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வருவதாக இருந்தது.
ஆனால், வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி சஞ்சிவ் குமார் விலகினார். இதையடுத்து, புதிய அமர்வில், வரும் 5ம் தேதிக்குப் பின் விசாரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும்வரை, ஜாமின் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி விலகியதற்கானகாரணம் தெரிவிக்கப்படவில்லை.

