ஜூன் 13! 11 எம்.எல்.சி., பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு: சட்ட மேலவையில் குறைகிறது பா.ஜ.,வின் பலம்
ஜூன் 13! 11 எம்.எல்.சி., பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு: சட்ட மேலவையில் குறைகிறது பா.ஜ.,வின் பலம்
ADDED : மே 21, 2024 06:15 AM

பெங்களூரு: கர்நாடகாவில், சட்ட மேலவைக்கு எம்.எல்.ஏ.,க்களால் தேர்வு செய்யப்படும், 11 எம்.எல்.சி., பதவிகளுக்கு ஜூன் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலால் சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் பலத்தின் அடிப்படையில், மேலவையில் காங்கிரஸ் பலம் அதிகரிக்கப் போகிறது; அதே நேரத்தில் பா.ஜ.,வின் பலம் குறையப்போகிறது.
கர்நாடகாவில் சட்டசபை, சட்ட மேலவை என, இரண்டு அவைகள் உள்ளன. மேலவையில் மொத்தம் நான்கு வகைகளில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அரசே நியமிப்பது; எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வது; ஆசிரியர், பட்டதாரிகள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வது; உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வது என, நான்கு வகைகளில் எம்.எல்.சி.,க்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
25 எம்.எல்.சி.,க்கள்
அந்த வகையில், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டு 25 எம்.எல்.சி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிறிய நீர்ப்பாசன துறை அமைச்சர் போசராஜு, கோவிந்த்ராஜ், அரவிந்த் குமார் அரலி, ஹரிஷ்குமார்; பா.ஜ.,வின் தேஜஸ்வினி கவுடா, நஞ்சுண்டி, ரகுநாத்ராவ் மல்காபுரே, ரவிகுமார், முனிராஜுகவுடா, ருத்ரேகவுடா; ம.ஜ.த.,வின் பாரூக் ஆகிய 11 எம்.எல்.சி.,க்களின் பதவிக் காலம், வரும் ஜூன் 17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இவர்களில், பா.ஜ.,வின் நஞ்சுண்டி, தேஜஸ்வினி கவுடா ஆகியோர் ஏற்கனவே எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்ததுடன் பா.ஜ.,வில் இருந்தும் விலகி, சமீபத்தில் காங்கிரசில் இணைந்தனர்.
எனவே மொத்தம் 11 பதவிகளுக்கு, வரும் ஜூன் 13ம் தேதி தேர்தல் நடக்கும் என, மத்திய தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 27ம் தேதி துவங்குகிறது.
மனுத் தாக்கல் செய்வதற்கு, 3ம் தேதி கடைசி நாள். 4ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை திரும்பப் பெறுவதற்கு, 6ம் தேதி கடைசி நாள்.
தேவைப்பட்டால், 13ம் தேதி காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். அதே நாள் மாலை 5:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கி, முடிவு அறிவிக்கப்படும்.
எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு
எம்.எல்.ஏ.,க்கள் தான், இந்த 11 எம்.எல்.சி.,களையும் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வர். ஒரு எம்.எல்.சி., வெற்றி பெறுவதற்கு 19 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. கர்நாடகாவின் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் பலம் 224.
காங்கிரஸ் - 133, பா.ஜ., - 66, ம.ஜ.த., - 19, கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி - 1, சர்வோதயா கர்நாடக கட்சி - 1, சுயேச்சை - 2, சபாநாயகர் ஆகியோர் அடங்குவர். சுர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பா நாயக் மறைவால், ஒரு உறுப்பினர் பலம், காங்கிரசுக்கு குறைகிறது.
சட்டசபையில் உள்ள கட்சிகளின் பலத்தின் அடிப்படையில், காங்., - 7, பா.ஜ., - 3, ம.ஜ.த., - 1 எம்.எல்.சி., பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, தற்போதைய நிலவரப்படி, ஆறு எம்.எல்.சி., பதவிகளை கொண்டுள்ள பா.ஜ.,வுக்கு மூன்று பதவிகளே கிடைக்கும். காங்கிரசின் பலம், 4ல் இருந்து, 7ஆக அதிகரிக்கும். ம.ஜ.த.,வின் பலம் அப்படியே இருக்கும்.
மூன்று கட்சிகளுமே வேட்பாளர்கள் தேர்வு குறித்து, விரைவில் ஆலோசனை நடத்தி அறிவிக்க உள்ளன. இந்த தேர்தலில் சுலபமாக வெற்றி பெறலாம் என்பதால், பலரும் தங்களுக்கு நெருக்கமான தலைவர்களிடம் இப்போதே துண்டுப் போட்டு, முன்பதிவு செய்கின்றனர்.
ஆசிரியர், பட்டதாரி
இதற்கிடையில், மேலவையின் மூன்று ஆசிரியர் தொகுதிகளுக்கும், மூன்று பட்டதாரி தொகுதிகளுக்கும், ஜூன் 3ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது. வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதன் அடிப்படையில், மேலவையில் பெரும்பான்மை கிடைக்குமா என்பது தெரியும்.
ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள முக்கிய சட்டமசோதாக்களை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் காத்திருக்கிறது.
லோக்சபா தேர்தல் முடிந்ததும், கர்நாடகாவில் அடுத்தடுத்து தேர்தல் நடப்பதால், அரசியல் தலைவர்கள் பரபரப்பாகவே இருக்கின்றனர். பெங்களூரு மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தலும் அடுத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

