ADDED : ஆக 13, 2024 07:26 AM

ஷிவமொகா என்றால், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது ஜோக் நீர்வீழ்ச்சி. இங்குள்ள புராதனமான கைடபேஸ்வரர் கோவில் பற்றி, பலருக்கும் தெரியாது. இந்த கோவில் ராஷ்டிர கூடர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும்.
ஷிவமொகா, கர்நாடகாவின் மலை பகுதி மாவட்டங்களில் ஒன்றாகும். நீர் வீழ்ச்சிகள், ஆறுகள், அணைகள் உள்ளன.
அனைவருக்கும் தெரியும். ஆனால் நுாற்றாண்டு பழமையான கோவில்களும் ஏராளமாக உள்ளன. இவற்றில் கைடபேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.
10ம் நுாற்றாண்டு
ஷிவமொகா, ஆனவட்டியின் கோடிபுரா கிராமத்தில் கைடபேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 10வது நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கதம்பர் முதல் கல்யாணி சாளுக்கியர் வரை அனைவராலும் பூஜிக்கப்பட்டவர் கைடபேஸ்வரர். இங்கு விநாயகர், வீரபத்ரர், விஷ்ணு, சப்த கன்னியர், ஆஞ்சநேயர் விக்ரஹங்கள் உள்ளன.
கோவில் வளாகத்தில் ராஷ்டிரகூடர் காலத்து நாக சிற்பங்கள், அம்பாள் விக்ரஹங்கள் உள்ளன. நிலத்தடியில் கிணறு போன்ற வடிவம் கொண்ட கோவில் இங்குள்ளது.
படிகளில் இறங்கி கோவிலுக்கு செல்லும் போது, மனதில் இனம் புரியாத பரவசம் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு, இந்த கோவில் சொர்க்கமாக தென்படும்.
ஷிவமொகாவுக்கு சென்றால், இந்த அற்புதமான கோவிலை தரிசிக்கலாம். சுற்றிலும் அடர்ந்த கானகத்தின் நடுவில், புராதன கோவில் அமைந்துள்ளது.
சாளுக்கியர் காலம்
ஹனகல்லில் இருந்து ஷிவமொகாவை நோக்கி சென்றால் வழியில், வரதா ஆற்றங்கரையில் உள்ள குபடூரில் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்டதாக, வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
புராதன கோவில் என்பதால், அவ்வளவாக பிரபலம் அடையவில்லை. இது பற்றி தெரிந்தவர்கள், கோவிலை தரிசிக்க மறப்பதில்லை.
ஷிவமொகாவுக்கு வருவோர், ஜோக் நீர் வீழ்ச்சியை மட்டும் பார்த்துவிட்டு, திரும்பி செல்லாமல் கைடபேஸ்வரர் கோவிலையும் தரிசியுங்கள்.
இங்கு செல்ல பஸ், தனியார் வாகன வசதியும் உள்ளது. ஆயினும், காட்டில் சிறிது தொலைவு நடந்து செல்ல வேண்டி இருக்கும்.
கைடபேஸ்வரர். இடம்: ஷிவமொகா
- நமது நிருபர் -

