நவீன கால சுதந்திர போராட்ட வீரர் கெஜ்ரிவாலுக்கு கைலாஷ் புகழாரம்
நவீன கால சுதந்திர போராட்ட வீரர் கெஜ்ரிவாலுக்கு கைலாஷ் புகழாரம்
ADDED : ஆக 15, 2024 07:58 PM
ஜி.டி.பி., நகர்:முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு நவீன கால சுதந்திர போராட்ட வீரர். மக்களுக்கு சேவை செய்ததற்கான விலையை கொடுத்து வருகிறார், என, சுதந்திர தின விழாவில் மாநில உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் புகழாரம் சூட்டினார்.
நாட்டின் 78வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சத்ரசல் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் டில்லி அரசின் சார்பில் மாநில உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றினார்.
அவரது உரை:
சுதந்திர தின விழாவில் நவீனகால சுதந்திரப் போராட்ட வீரர் என்று அழைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், கொடியேற்ற முடியாமல் சிறையில் தவிக்கிறார்.
இந்தக் கொடியின் கீழ் நின்று, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நவீன சுதந்திரப் போராட்ட வீரர் என்று நான் பெருமையுடன் சொல்ல முடியும். ஏனென்றால் அவர் சிறைக்குச் சென்று, டில்லி மக்களுக்காக பாடுபடுவதற்கான தண்டனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஜனநாயக விரோத சக்திகளுக்கு முன் அவர் பணிந்தோ உடைந்தோ போகவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. கல்வியறிவின்மை, வறுமை, வேலையின்மை, நோய்களை விரட்டவே சுதந்திரம் கிடைத்தது.
டில்லியில் உள்ள மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம், இலவச மின்சாரம், உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் மூலம், இந்த நோய்களிலிருந்து நாட்டை விடுவிக்கும் முயற்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார்.
இந்தியாவின் ஜனநாயகம் எந்த சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாத அளவுக்கு வலிமையானது.
ஆம் ஆத்மி தலைமையிலான டில்லி அரசு, அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புவது போல் பெண்களுக்கு இலவச மின்சாரம், கல்வி, சுகாதாரம், பேருந்து பயணங்களைத் தொடர்ந்து அளிக்கும்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.

