காளி ஆற்றின் பாலம் உறுதி மாவட்ட நிர்வாகம் சான்றிதழ்
காளி ஆற்றின் பாலம் உறுதி மாவட்ட நிர்வாகம் சான்றிதழ்
ADDED : ஆக 17, 2024 11:06 PM

உத்தர கன்னடா: கார்வாரில் காளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பாதுகாப்பாக உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில், காளி ஆற்றின் குறுக்கே இருந்த பழைய பாலம், ஆக., 7ம் தேதி நள்ளிரவு இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் வந்து கொண்டிருந்த தமிழக லாரி ஆற்றில் விழுந்தது. அதில் இருந்த ஓட்டுனர் பாலமுருகன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்போது புதிய பாலத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில நாட்களாக, புதிய பாலத்தின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ள படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக கலெக்டர் லட்சுமி பிரியா கூறியதாவது:
இந்த வீடியோ பொதுமக்களிடைம் தேவையற்ற அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படி மேம்பாலத்தை நிர்வகிக்கும் ஐ.ஆர்.பி., நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆய்வு நடத்திய அந்நிறுவன அதிகாரிகள், வீடியோவில் காட்டப்பட்டு உள்ள பகுதி, கட்டுமான பணியின்போது கான்கிரீட் கலவை அதிகமானதால் விரிசல் போன்று தோன்றி உள்ளது. எனவே, அச்சப்பட தேவையில்லை என, அறிக்கை கொடுத்துஉள்ளனர்.
பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த, வீடியோக்களை வெளியிட்ட நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

