யோகேஸ்வரை காங்கிரசில் சேர்க்க 'கட்டை' போடும் 'கனகபுரா பிரதர்ஸ்'
யோகேஸ்வரை காங்கிரசில் சேர்க்க 'கட்டை' போடும் 'கனகபுரா பிரதர்ஸ்'
ADDED : ஆக 16, 2024 10:56 PM

ராம்நகர் : பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வரை மீண்டும் காங்கிரசில் சேர்க்க, 'கனகபுரா பிரதர்ஸ்' முட்டுக்கட்டையாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர். ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதியில் இருந்து, ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர்.
இந்த தொகுதிக்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, பா.ஜ.,வில் இருந்து போட்டியிட நினைக்கிறார். ஆனால், தொகுதியை விட்டு தர ம.ஜ.த., மறுக்கிறது.
பா.ஜ., வேட்பாளராக போட்டியிட, 'சீட்' கிடைக்கா விட்டால் சுயேச்சையாக போட்டியிடவும் முடிவு செய்து உள்ளார். கடந்த 2004, 2008 சட்டசபை தேர்தலில் இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, யோகேஸ்வர் வெற்றி பெற்றார். அதன்பின் நடந்த இரண்டு இடைத்தேர்தல் உட்பட ஐந்து தேர்தலில் காங்கிரஸ் இங்கு வெற்றி பெறவில்லை.
இதனால், யோகேஸ்வரை மீண்டும், காங்கிரசுக்கு அழைத்து வரும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவரை மீண்டும் காங்கிரசில் சேர்க்க, துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பியும், முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில் சுரேஷை தோற்கடிக்க, யோகேஸ்வர் தீவிரமாக பணியாற்றினார். தம்பியை தோற்கடிக்க காரணமாக இருந்தவரை, எக்காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்று, அண்ணன் முட்டுக்கட்டை போடுகிறார். அண்ணனின் கோரிக்கையை தம்பியும் முன்வைக்கிறார்.
'சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நான் தான்' என்று, சிவகுமார் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இது, யோகேஸ்வரை, காங்கிரசில் சேர்க்காமல் இருக்க, சிவகுமார் கையாண்ட யுக்தி என்றும் சொல்லப்படுகிறது. யோகேஸ்வர் ஒரு முறை சுயேச்சையாக வெற்றி பெற்றவர் என்றாலும், இம்முறை சுயேச்சையாக களம் இறங்கினால், வெற்றி பெறுவாரா என்பது சந்தேகம் தான்.

