பா.ஜ., கொடி, பேனர்கள் அகற்றம் காங்.,கில் சேர்ந்த கரடி சங்கண்ணா அதிரடி
பா.ஜ., கொடி, பேனர்கள் அகற்றம் காங்.,கில் சேர்ந்த கரடி சங்கண்ணா அதிரடி
ADDED : ஏப் 19, 2024 06:27 AM

கொப்பால்: காங்கிரசில் சேர்ந்தவுடன், தன் அலுவலகத்தில் இருந்த பா.ஜ., கொடிகள், பேனர்களை கரடி சங்கண்ணா அப்புறப்படுத்தினார்.
லோக்சபா தேர்தலில் கொப்பால் தொகுதியில் இன்னாள் எம்.பி., கரடி சங்கண்ணா, பா.ஜ.,வில் சீட் எதிர்பார்த்தார். இதற்காக அதிகபட்சம் முயற்சித்தார். ஆனால் பசவராஜ் கியாவடார் களமிறக்கப்பட்டு உள்ளார். இதனால் கொதிப்படைந்த கரடி சங்கண்ணா, பா.ஜ.,வை விட்டு விலகி நேற்று முன்தினம் காங்கிரசில் இணைந்தார்.
காங்கிரசில் இணைந்த 24 மணி நேரத்தில், அவரது வீட்டின் சூழ்நிலையே மாறியது. இத்தனை நாட்களாக அவரது வீட்டில், அலுவலகத்தில் பறந்த பா.ஜ., கொடி, பேனர் உட்பட அனைத்து பொருட்களையும், நேற்று காலை கரடி சங்கண்ணா அகற்றினார். அவற்றை பா.ஜ., அலுவலகத்துக்கு அனுப்பினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் போட்டோவை தவிர, மற்ற பொருட்கள் கோணிப்பையில் போட்டு பா.ஜ., அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன.
காங்., - எம்.எல்.ஏ., ராகவேந்திரா ஹிட்னால், நேற்று காலை சிற்றுண்டிக்காக கரடி சங்கண்ணா வீட்டுக்கு வந்திருந்தார். அப்போதுதான் பா.ஜ., உபகரணங்களை, வெளியே அனுப்பியது தெரிந்தது.
கரடி சங்கண்ணா கூறியதாவது:
காங்கிரசுக்கு என்னை அழைத்து கொண்டதற்கு, நன்றி தெரிவிக்கிறேன். பா.ஜ.,வினரின் விமர்சனங்களை வரவேற்கிறேன்.
சீட் கிடைப்பது முக்கியம் அல்ல. பா.ஜ.,வில் மரியாதை இல்லை. கட்சியின் எந்த தலைவரும் என்னிடம் பேசவில்லை. மன வலியால் கட்சியை விட்டு விலகி, காங்கிரசில் இணைந்தேன்.
நான் எந்த நிபந்தனையும் விதிக்காமல், இந்த கட்சிக்கு வந்தேன்.
கொப்பாலில் காங்., வேட்பாளர் ராஜசேகர ஹிட்னால் வெற்றி பெறுவார். அவர் வெற்றி பெற்ற பின், ரயில்வே திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். கொப்பாலில் விமான நிலையம் கட்டப்பட வேண்டும்.
தலைவராக வேண்டும் என்றால், அவருக்கு திறமை இருக்க வேண்டும். எனக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது துரதிர்ஷ்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.

