மேகதாது அணைக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடகா மீண்டும் கடிதம்
மேகதாது அணைக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடகா மீண்டும் கடிதம்
ADDED : ஆக 24, 2024 01:55 AM
பெங்களூரு: மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளிக்கும்படி, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு, காவிரி நீர் வாரியம் மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.
ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகா சங்கமம் அருகில் உள்ள மேகதாது எனும் இடத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது கர்நாடக அரசின் திட்டம். மொத்தம், 9,000 கோடி ரூபாயில் அணை கட்டி, 400 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதும், பெங்களூரு நகருக்கு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வது நோக்கமாகும்.
இதற்கான முழு திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு, 2019 ஜூன் 20ம் தேதி, கர்நாடக அரசு அனுப்பி வைத்திருந்தது.
ஆனால், மேகதாதில் அணை கட்டுவதால், தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று கூறி, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அவ்வப்போது நடக்கின்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திலும்; காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்திலும், ஒப்புதல் அளிக்கும்படி கர்நாடக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக திட்ட அறிக்கை அனுப்பி ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
எனவே ஒப்புதல் அளிக்கும்படி, காவிரி நீர் வாரியம் சார்பில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இம்மாதம் 9ம் தேதி மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் நேற்று தான் வெளியானது.