ADDED : மே 30, 2024 10:03 PM
பெங்களூரு,- கர்நாடகாவில் திரவ நைட்ரஜன் பான் பீடாவை தடை செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. 'இதை பயன்படுத்தினால், ஏழு ஆண்டு சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரித்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த 12 வயது சிறுமி, திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, 'திரவ நைட்ரஜன் பான் பீடா' சாப்பிட்டார். அதன்பின் வயிற்று வலியால் அவதிப்பட்டார். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, வயிற்றில் ஓட்டைகள் ஏற்பட்டது தெரிந்தது. இதை அறுவை சிகிச்சை மூலம், சரி செய்தனர்.
இதை தீவிரமாக கருதிய, ஹோட்டல் அசோசியேஷன், பெங்களூரின் அனைத்து ஹோட்டல்களிலும், திரவ நைட்ரஜன் பான் பீடாக்களை தடை செய்ய திட்டமிட்டது.
இது தொடர்பாக, அனைத்து ஹோட்டல்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தியது.
இத்தகைய பான் பீடாவை தடை செய்யும்படி, பெடரேஷன் ஆப் கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை சேம்பர்சுக்கு, கடிதம் எழுதியது.
இந்நிலையில் கர்நாடக அரசு நேற்று வெளிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
கர்நாடகாவில் திரவ நைட்ரஜன் பான் பீடாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல், ரெஸ்டாரென்ட்களில் ஸ்மோக்கிங் பிஸ்கட் உட்பட, மற்ற தின்பண்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் போது, இத்தகைய பான் பீடா பயன்படுத்த கூடாது.
இது தொடர்பாக, மே 3ல் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் நன்மையை கருதி, தற்போது மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.