ஓசூர் வரை மெட்ரோ சேவை கர்நாடக அமைச்சர்கள் எதிர்ப்பு?
ஓசூர் வரை மெட்ரோ சேவை கர்நாடக அமைச்சர்கள் எதிர்ப்பு?
ADDED : செப் 09, 2024 05:40 AM
பெங்களூரு: ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, கர்நாடக அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையில், புதிதாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் சேவை துவங்க வாய்ப்பு உள்ளது.
பொம்மசந்திராவில் இருந்து, தமிழகத்தின் ஓசூர் 20 கி.மீ., துாரத்தில் தான் உள்ளது. இதனால் மெட்ரோ சேவையை, ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று, கர்நாடகாவிடம் தமிழகம் கோரிக்கை விடுத்தது.
கடந்த சில தினங்களுக்கு முன், ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது குறித்து, கர்நாடக - தமிழக அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கர்நாடக அமைச்சர்கள் சிலர், ஓசூர் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
'தமிழக அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இதனால் பெங்களூரு அருகே உள்ள, ஓசூர் வேகமாக வளர வாய்ப்பு உள்ளது. மெட்ரோ ரயிலை அங்கு வரை, நாம் நீட்டித்து கொடுத்தால், நமக்கு எந்த பயனும் இல்லை. முழு பலனும் தமிழகத்திற்கு தான் கிடைக்கும். கர்நாடகாவை சேர்ந்தவர்கள், ஓசூர் சென்று தொழிற்சாலை துவங்கவும் வாய்ப்பு உள்ளது' என்று கூறி உள்ளனர்.
இந்த விஷயத்தை முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி, காதிலும் போட்டு உள்ளனர். தக்க நேரம் பார்த்து, முதல்வரிடம் எடுத்து கூறும்படியும், வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.