விமானங்களில் உள்ள சாதனங்கள் சரியாக வேலை செய்கின்றனவா?: ஆய்வு செய்ய 'ஏர் இந்தியா'வுக்கு உத்தரவு
விமானங்களில் உள்ள சாதனங்கள் சரியாக வேலை செய்கின்றனவா?: ஆய்வு செய்ய 'ஏர் இந்தியா'வுக்கு உத்தரவு
ADDED : அக் 12, 2025 11:16 PM

மும்பை: பி.சி.எம்., எனப்படும், மின்சக்தி சீரமைப்பு கருவி மாற்றப்பட்ட அனைத்து வி மானங்களிலும், 'ராட்' எனப்படும், 'ரேம் ஏர் டர்பைன்' சாதனம் சரியாக வேலை செய்கிறதா என்பதை மறு ஆய்வு செய்யும்படி, 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
ராட் சாதனம் 'டாடா' குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் இரண்டு விமானங்களில், சமீபத்தில், ராட் சாதனம் தானாக இயங்கியது.
இரட்டை இன்ஜின்கள் செயலிழக்கும் போது அல்லது மொத்த மின்சாரம் அல்லது ஹைட்ராலிக் செயலிழப்பு ஏற்பட்டால், ராட் சாதனம் தானாகவே இயங்கும்.
இது காற்றின் வேகத்தை பயன்படுத்தி அவசரகால மின்சாரத்தை உருவாக்கும். கடந்த 4ல், பஞ்சாபின் அமிர்தசரசில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின்- பர்மிங்காமுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், தரையிறங்குவதற்கு முன், ராட் சாதனம் தானாக இயங்கியது, பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
இதே போல், மற்றொரு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வியன்னாவில் இருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், 'ஆட்டோபைலட்' அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் பி.சி.எம்., கருவி மாற்றப்பட்ட அனைத்து விமானங் களிலும், ராட் சாதனம் சரியாக இயங்குகிறதா என்பதை மறு ஆய்வு செய்யும்படி, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ., உத்தரவிட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கை பி.சி.எம்., என்பது விமானத்தின் மின் உற்பத்தி அமைப்பிலிருந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் கருவிகளுக்கு மின்சாரத்தை மாற்றி, ஒழுங்குபடுத்தி, வினியோகிக்கும் ஒரு முக்கியமான மின் கூறு.
இதற்கிடையே, 'ராட்' சாதனங்கள் தானாக இயங்கிய விவகாரத்தில், அமல்படுத்த வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான அறிக்கையை வழங்கும்படி, அமெரிக்காவின் 'போயிங்' நிறுவனத்திற்கும், டி.ஜி.சி.ஏ., உத்தரவிட்டுள்ளது.