ADDED : செப் 06, 2024 05:57 AM

ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டியில் 100 ரன்கள் அடித்தால், பெரிய விஷயமாக பார்க்கப்படும். ஆனால் இன்றைய கிரிக்கெட்டர்கள் 20 ஓவர் போட்டிகளில் கூட சதம் அடிக்க ஆரம்பித்து உள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க கிரிக்கெட் வீரர்களின் மனவலிமை, போராட்ட குணத்தை உறுதி செய்யும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடிப்பதை வீரர்கள் கவுரவமாக கருதுவர்.
ஆனால் இந்திய அணியின் இரண்டு கிரிக்கெட்டர்கள், டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்து அசத்தி உள்ளனர். ஒருவர் வீரேந்திர சேவாக், இன்னொருவர் கருண் நாயர்.
கேரளாவின் ஆலப்புழை மாவட்டம் செங்கானுரை சேர்ந்த கலாதரன். இவரது மனைவி பிரேமா. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இன்ஜினியராக வேலை செய்தார். 1991 டிசம்பர் 6ம் தேதி கருண் நாயர் பிறந்தார்.
அவர் பிறந்த பின், தந்தைக்கு பெங்களூருக்கு இடமாற்றம் கிடைத்தது. கோரமங்களாவில் வசித்தனர்.
கருணின் தாய் பிரேமா, சின்மயா வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார்.
குறை பிரசவம்
குறை பிரசவத்தில் பிறந்த இவருக்கு, நுரையீரல் பகுதியில் பிரச்னை இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், நுரையீரல் பிரச்னை சிகிச்சையின் ஒரு பகுதியாக, விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும்படி அறிவுறுத்தினர்.
கருணுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்ததால், அவரை கிரிக்கெட் பயிற்சியில் பெற்றோர் சேர்த்துவிட்டனர்.
முதலில் சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்த அவர், கிரிக்கெட் விளையாடும் வாய்ப்புக்காக பிராங்க் அந்தோணி பப்ளிக் பள்ளிக்கு சென்றார்.
அங்கு சென்றதும் பள்ளிகளுக்கு இடையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. பேட்டிங்கில் அசத்தினார்.
கடந்த 2013 - 2014 ராஞ்சி கோப்பை சீசனில், கர்நாடகா அணிக்காக அறிமுகமானார். அந்த தொடரில் மூன்று சதங்கள் அடித்து அசத்தினார். 2015 - 2016 சீசனிலும் 2 சதம், 2 அரைசதம் உட்பட 500 ரன்கள் விளாசினார்.
இதனால் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. 2016 மே மாதம் ஜிம்பாவே அணிக்கு எதிரான, ஒருநாள் தொடரில் அறிமுகம் ஆனார். கணிசமாக ரன்கள் குவித்தார்.
வாய்ப்பு மறுப்பு
மொஹாலியில் 2016ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த, இங்கிலாந்து எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியில் ஓரளவு ரன்கள் குவித்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியினருக்கு தனது பேட்டால் சம்மட்டி அடி கொடுத்த, கருண் நாயர் 303 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
வீரேந்திர சேவாக்கிற்கு பின், இந்திய அணி சார்பில் டெஸ்ட் போட்டியில், முச்சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார்.
ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. முச்சதம் அடித்த பின் நான்கு டெஸ்டில் மட்டும் விளையாடினார். அதிலும் சொற்ப ரன்கள் குவித்ததால், இந்திய அணியில் இருந்து அவருக்கு 'கேட் பாஸ்' கொடுக்கப்பட்டது.
கடந்த 2017க்கு பின் அவர் இந்திய அணியில் விளையாடவில்லை. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் ஓரளவு ஜொலித்தாலும், அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்தும், மஹாராஜா டிராபியில் மைசூரு வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த கருண் நாயர், கோப்பையை வென்று கொடுத்ததுடன், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 560 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இந்திய அணியில் இருந்து, தனக்கு மீண்டும் அழைப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறார், இந்த 32 வயது பேட்ஸ்மேன்.
தேர்வு குழுவினரே கொஞ்சம் உங்கள் பார்வையை, கருண் நாயர் பக்கம் திருப்பினாலும் நன்றாக இருக்கும். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என, கர்நாடக கிரிக்கெட் வீரர்களும் ஆசைப்படுகின்றனர்.
- நமது நிருபர் -