எம்பிக்களின் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நதிகளின் பெயர்: சூட்டினார் பிரதமர் மோடி!
எம்பிக்களின் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நதிகளின் பெயர்: சூட்டினார் பிரதமர் மோடி!
UPDATED : ஆக 11, 2025 02:16 PM
ADDED : ஆக 11, 2025 12:58 PM

புதுடில்லி: பார்லி உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்கு நான்கு பெரிய நதிகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன என புதிய குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
டில்லியின் பாபா காரக் சிங் மார்க்கில், எம்.பி.,க்களுக்காக, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள, 184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 11) திறந்து வைத்தார். ஒவ்வொரு குடியிருப்பும் 5,000 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது.
இந்த வளாகத்தில் நான்கு குடியிருப்பு டவர்கள் உள்ளன, அவை நாட்டின் நான்கு நதிகளான கிருஷ்ணா, கோதாவரி, கோசி மற்றும் ஹூக்ளி ஆகியவற்றின் பெயரிடப்பட்டுள்ளன. தொடக்க விழாவின் போது, பிரதமர் வளாகத்தில் ஒரு சிந்தூர் மரக்கன்றை நட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று பார்லிமென்டில் எனது சகாக்களுக்கான குடியிருப்பு வளாகத்தைத் திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான்கு டவர்களுக்கும் கிருஷ்ணா, கோதாவரி, கோசி மற்றும் ஹூக்ளி, இந்தியாவின் நான்கு பெரிய நதிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை சிலர் ஒரு கோபுரத்தின் பெயராகக் கருதினால் சங்கடமாக உணருவார்கள். அவர்கள் அதை ஒரு நதியாகப் பார்க்க மாட்டார்கள்.
முன்னதாக அமைச்சகங்கள் வாடகை கட்டடங்களில் செயல்பட்டன. இதற்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.1500 கோடி செலவாகும். புதிய குடியிருப்புகளில் எங்கள் எம்.பி.க்கள் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ள மாட்டார்கள், மேலும் அவர்கள் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும். இந்த பல மாடி கட்டடங்களில், 180க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஒன்றாக வாழ்வார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.