ADDED : ஆக 08, 2024 06:05 AM

கடலோர மாவட்டமான உத்தர கன்னடாவில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் ஒன்று கவாலா குகை. அந்த குகையை பற்றி பார்க்கலாம்.
காளி ஆற்றில், ரப்பர் படகில் சாசகம் செய்யும், 'ரேபிடிங்'கிற்கு பெயர் பெற்றது தண்டேலி. இந்த தண்டேலி வன சரணாலயத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது கவாலா குகை.
குறுகலான பாதை
இந்த குகை எரிமலை செயல்பாட்டினால் உருவானது. அடர்ந்த வனப்பகுதிக்குள் ஆழமான இடத்தில் அமைந்துள்ளது. தண்டேலியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் இந்த குகையும் ஒன்று.
குகையின் நுழைவாயிலை அடைய 375 படிக்கட்டுகள் கீழே இறங்கி செல்ல வேண்டும். நுழைவு வாயில் பகுதியில், ஒரு சிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருக்கும் சிவலிங்கத்தை காண வளைந்து, நெளிந்து காணப்படும் குறுகலான பாதைக்குள் ஊர்ந்து செல்ல வேண்டும்.
சிவலிங்கத்தை தரிசனம் செய்ததும், குகையை விட்டு வெளியே வர வேறு வழி உள்ளது. பின், கவாலா குகையின் உச்சிக்கு செல்லலாம். மலை உச்சிக்கு செல்லும் வழியில், குகைக்குள் இருக்கும் பள்ளத்தாக்கு வழியாக, காளி ஆற்றின் அழகிய காட்சியை கண்டு ரசிக்கலாம்.
வனத்துறையினர்
இந்த குகைக்கு தனியாக யாரும் செல்ல முடியாது. வனத்துறையினர் உடன் தான் செல்ல முடியும். தினமும் காலை 6:00 மணிக்கு, குகைக்குள் செல்லும் பயணத்தை வனத்துறையினர் துவங்குவர்.
தண்டேலியில் இருந்து சரணாலயத்திற்குள் செல்ல, ஜீப்புகள், தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். பெங்களூரில் இருந்து இந்த குகை 484 கி.மீ.,யில் அமைந்துள்ளது.
பஸ்சில் செல்பவர்கள் தண்டேலிக்கு நேராக செல்லலாம். ரயிலில் செல்பவர்கள் அம்பேவாடி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சென்றடையலாம். விமானத்தில் சென்றால் மங்களூரு அல்லது கோவா சென்று அங்கிருந்து வர வேண்டும்--நமது நிருபர் --.