ADDED : ஆக 09, 2025 04:24 AM

சாத்துார்: தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, விருதுநகர் மாவட்டம், சாத்துாரில் நேற்று பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 50 மாதங்கள் ஓடி விட்டன. உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. ஆனால், தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிகளும் பொய்யாக உருவாக்குகின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக, பழனிசாமி வாய் திறக்காதது ஏன் என, அமைச்சர் துரைமுருகன் கேட்டுள்ளார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார்.
தி.மு.க., தான் போலியாக வாக்காளர்களை சேர்க்கிறது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 27,779 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
நீதிமன்றம் சென்று ஆதாரத்தோடு வாதாடினோம்; இப்போது நீக்கியிருக்கின்றனர். ஒரு தொகுதியில் 27,779 பேர் என்றால், இந்த ஆட்சியில் எத்தனை போலி வாக்காளர்கள் இருப்பர்?
அதேபோல, பெரம்பூர், தி.நகர் உள்ளிட்ட சென்னையின் பல தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்படி போலி வாக்காளர்கள் வாயிலாகத்தான் தி.மு.க., சென்னையில் வெற்றி பெறுகிறது. இது, ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில், கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ஆனால், ஒப்படைத்தவரை கைது செய்துவிட்டு, கள்ள ஓட்டு போட்டவரை விடுவித்தனர்.
அதேபோல, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது ஒன்றரை மணிநேரத்தில் 1,200 ஓட்டுகளை தி.மு.க., பதிவு செய்தது.
நீதிமன்றம் சென்றோம், ஒன்றரை மணிநேரத்தில் எப்படி இவ்வளவு ஓட்டு பதிவாகும் என்று கேட்டு, முறைகேடாக நடந்த தேர்தலை ரத்து செய்தது நீதிமன்றம். கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தியதிலும் முறைகேடு தான். தி.மு.க., அரசே, அந்த தேர்தலை ரத்து செய்தது.
அந்த காலத்தில் மன்னர் அமைச்சர்களைப் பார்த்து, 'நாடு எப்படி இருக்கிறது?' என்று கேட்பார். உடனே அவர்கள், 'நாடு சுபிட்சமா இருக்கிறது, மும்மாரி மழை பெய்கிறது' என்று பொய் சொல்வர். அப்படித்தான், நம் முதல்வரும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பேசினார்.