நகை எல்லாம் நீயே வச்சுக்கோ... அந்த பதக்கத்தை மட்டும்; திருடனிடம் மன்றாடிய கடற்படை வீரரின் குடும்பம்!
நகை எல்லாம் நீயே வச்சுக்கோ... அந்த பதக்கத்தை மட்டும்; திருடனிடம் மன்றாடிய கடற்படை வீரரின் குடும்பம்!
UPDATED : ஆக 17, 2024 12:10 PM
ADDED : ஆக 17, 2024 10:45 AM

வயநாடு: கேரளாவின் வயநாட்டில் முன்னாள் கடற்படை வீரரின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்ற திருடனிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்துள்ளனர்.
திருட்டு
அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாவட்டமே நிலைகுலைந்த அந்த நேரத்தில், அப்பகுதியை சேர்ந்த முன்னள் கப்பற்படை வீரரான அமல் ஜான் என்பவரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், பல லட்சம் மதிப்பு நகை, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ரேடோ வாட்ச் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களுடன், பணியின் போது வாங்கிய மத்திய அரசின் பதக்கங்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக 3 நாட்கள் வெளியூருக்குச் சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த முன்னாள் கப்பற்படை வீரர் அமல் ஜான் குடும்பத்தினர், இந்த திருட்டு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தனர்.
கோரிக்கை
இந்த நிலையில், 'திருடிச் சென்ற நகை, விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் நீயே வைத்துக் கொள், அந்தப் பதக்கங்களை மட்டும் திருப்பி கொடுத்துவிடு' என்று திருடர்களுக்கு அமல் ஜான் குடும்பததினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலை மதிப்பில்லாதவை
இது தொடர்பாக அமல் ஜானின் மாமா ஹுமாயுன் கபூர் விடுத்துள்ள பேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், 'நீங்கள் திருடிச் சென்ற விலையுயர்ந்த பொட்களின் விலை எல்லாம் கணக்கு போட்டு பார்த்து விட்டோம். நீங்கள் எடுத்துச் சென்ற பதக்கங்கள் மற்றும் விருதுகள் விலை மதிப்பில்லாதவை.
நீங்களே வச்சுக்கோங்க
இந்த சோதனையான காலத்தில் எங்களின் வீட்டை உடைத்து பொருட்களை எடுத்துச் சென்ற உங்களின் சிரமம் எங்களுக்கு புரிகிறது. நகை, ரேடோ வாட்ச் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், பணியின் போது அரசால் பாராட்டப்பட்டு, கவுரவிக்கப்பட்டு வழங்கப்பட்ட விருதுகளையும், பதக்கங்களையும் மட்டும் திருப்பி கொடுத்து விடுங்கள்.
திருப்பி கொடுங்க
ஒரு கிராமத்தில் இருந்து படித்து என்.டி.ஏ., தேர்வு எழுதி, இந்த நிலைக்கு சென்று, அங்கு சிறப்பாக பணிபுரிந்து விருது வாங்கும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரின் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கும் என்று உங்களுக்கே நன்கு தெரியும். எனவே, பதக்கங்களை மட்டும் கொடுத்து விடுங்கள். நீங்கள் நினைத்தாலும், அரசின் அந்த விருதுகள் மற்றும் பதக்கங்களை விற்க முடியாது, யாரும் வாங்கவும் மாட்டார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

