ADDED : செப் 18, 2024 04:52 AM
பெங்களூரு, : சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை கொன்ற வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேரின் நீதிமன்ற காவல், நேற்று முடிவடைந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம், பெங்களூரு 24வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சில தொழில்நுட்ப ஆதாரங்களை அரசு வக்கீல் பிரசன்னகுமார் தாக்கல் செய்தார். ''குற்றம் சாட்டபட்டவர்களுக்கு எதிராக, இன்னும் சில ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். 'ஏ10' வினய் மொபைல் போனை மீண்டும் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். இவர்களுக்கு ஜாமின் கிடைத்தால், சாட்சிகளை அழிக்கும் வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விஸ்வநாத் கவுடர், தர்ஷன் உட்பட 17 பேரின் நீதிமன்ற காவலை, வரும் 30 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில், தர்ஷனுக்கு, அவரது வக்கீல்கள் எழுதிய கடிதத்தில், 'சிறையில் எந்த பிரச்னையும் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அமைதியாக இருங்கள்' என்று கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

