பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வாழ்த்து
பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வாழ்த்து
ADDED : மார் 29, 2024 09:44 PM

சண்டிகர்:“கடவுள் எனக்கு ஒரு மகளை பரிசாக வழங்கியுள்ளார். தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக உள்ளனர்,” என, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 2015ல் விவாகரத்து செய்தார். இதையடுத்து, 2022ல் டாக்டர் குர்பிரீத் கவுரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம், குர்பிரீத் கவுருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து, சமூக வலைதளத்தில் பகவந்த் மான் வெளியிட்டுள்ள பதிவில், “கடவுள் எனக்கு ஒரு மகளை பரிசாக வழங்கியுள்ளார். தாயும் மகளும் மிகவும் நலமாக இருக்கின்றனர்,” என கூறியுள்ளார். மேலும், குழந்தையின் -படத்தையும் வெளியிட்டுள்ளார்.
நேற்று முன் தினம், புதுடில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெண் குழந்தைக்கு தந்தை ஆகியுள்ள பகவந்த் மானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் கூறினார்.
பஞ்சாப் பா.ஜ., தலைவர் சுனில் ஜாகர், “ பகவந்த் மான் தம்பதிக்கு என் வாழ்த்துகள். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்,”என, கூறினார்.

