ADDED : ஜூன் 27, 2024 01:45 AM
ரோஸ் அவென்யூ:பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், பா.ஜ., பீதியடைந்து, போலி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ., மூலம் கைது செய்ததாக, ஆம் ஆத்மி நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது.
நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, கலால் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ., முறைப்படி கைது செய்தது. இந்த வழக்கில் ஐந்து நாள் காவலில் எடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., விரும்புகிறது.
இதுகுறித்து 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஆம் ஆத்மி கூறியிருப்பதாவது:
சர்வாதிகாரி, கொடுமையின் அனைத்து எல்லைகளையும் கடந்தார். இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தபோது, பா.ஜ., பீதியடைந்து, கெஜ்ரிவாலை சி.பி.ஐ.,யால் ஒரு பொய் வழக்கில் கைது செய்தது.
கெஜ்ரிவாலை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு சி.பி.ஐ., அழைத்துச் சென்றது. அங்கு அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தது. சர்வாதிகாரி, நீங்கள் எவ்வளவு அடக்குமுறைகளை இழைத்தாலும், கெஜ்ரிவால் தலைவணங்கவும் மாட்டார், உடைந்து போகவும் மாட்டார்.
இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.