சிறையில் கெஜ்ரிவால் உடல்நிலை இண்டியா கூட்டணி 30ல் பேரணி
சிறையில் கெஜ்ரிவால் உடல்நிலை இண்டியா கூட்டணி 30ல் பேரணி
ADDED : ஜூலை 26, 2024 01:01 AM
புதுடில்லி:திஹார் சிறையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலையை சீர்குலைக்கும் பா.ஜ.,வின் செயலைக் கண்டித்து, இண்டியா கூட்டணிக் கட்சிகள், வரும் 30ம் தேதி ஜந்தர் மந்தரில் பேரணி நடத்துகிறது.
டில்லி அரசின் 2021 -2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.
வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்தது. இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்குப் பின், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால், சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைக்காததால் அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சிறைக்குள்ளேயே அவரைக் கொல்ல பா.ஜ., சதி செய்வதாகவும் ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டை கூறியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., இதுவரை பதில் சொல்லவில்லை.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திஹார் சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மாதம் 3ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை ரத்தத்தில் சர்க்கரை அளவு 26 முறை குறைந்துள்ளது. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசும், டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனாவும் கெஜ்ரிவால் உயிருடன் விளையாடுகின்றனர்.
கெஜ்ரிவாலின் உடல்நலக் குறைவு குறித்த பிரச்சனை தொடர்பாக இண்டியா கூட்டணிக் கட்சிகள் சார்பில், வரும் 30ம் தேதி ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

