ADDED : மே 24, 2024 01:27 AM

புதுடில்லி, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை 1886ல் கட்டப்பட்டது. அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 999 ஆண்டு களுக்கு அணையை பராமரித்து நிர்வகிக்கும் குத்தகை தமிழகத்துக்கு வழங்கப்பட்டது.
அணையின் ஸ்திரத்தன்மை குறித்து கேரள அரசு கேள்வி எழுப்பியதை அடுத்து, அணையின் பாதுகாப்பை மதிப்பிட, நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு, அணை பாதுகாப்புடன் இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, முல்லை பெரியாறு அணையில், தமிழகம் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க, உச்ச நீதிமன்றம் 2014ல் அனுமதி அளித்தது. அணையை பலப்படுத்திய பின், 152 அடி வரை நீரை தேக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து கீழ்நோக்கி 1,200 அடி தொலைவில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடும்படி மத்திய அரசிடம் விண்ணப்பம் அளித்தது. கேரள அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த விண்ணப்பம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கடந்த ஜனவரியில் அளிக்கப்பட்டது.
மனுவில் அதன் விபரம்:
முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, தற்போதுள்ள அணைக்கு 1,200 அடி கீழே புதிய அணையை கட்டிய பின், பழைய அணையை இடிக்க அனுமதி கோருகிறோம்.
புதிய அணை கட்டும் போதும், கட்டி முடிக்கப்பட்ட பின்னும், தமிழகத்திற்கான தண்ணீர் பகிர்வு தற்போதைய ஏற்பாட்டின்படி தடையின்றி தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சகம், நிபுணர் மதிப்பீட்டு குழுவுக்கு மே 14ல் அனுப்பியது. இது தொடர்பான கூட்டத்தை, மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழு வரும் 28ல் நடத்த உள்ளது.
தற்போதுள்ள முல்லை பெரியாறு அணையும், புதிதாக கட்ட திட்டமிட்டுள்ள அணையும் மத்திய அரசின் புலிகள் சரணாலய பகுதியில் வருவதால், அணையை இடிப்பதற்கோ, புதிதாக கட்டுவதற்கோ மத்திய அரசின் பல ஒப்புதல்களை பெற வேண்டும். குறிப்பாக சுற்றுச்சூழல் துறை அனுமதி மிக அவசியம்.
புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் - கேரளா இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என, 2014ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது கவனிக்கத்தக்கது.
சிலந்தி ஆறு தடுப்பணை, முல்லை பெரியாறு அணை விவகாரங்களை தமிழக அரசு கவனமாக ஆராய்ந்து வருகிறது. இது தொடர்பாக, தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்கும்; நடவடிக்கை எடுக்கும். அது என்ன நடவடிக்கை என்பது விரைவில் தெரியும்.
சுப்பிரமணியன்
தமிழக பன்மாநில நதிகள் பிரிவு தலைவர்