முல்லை பெரியாறில் புதிய அணை : கேரள அமைச்சர் உறுதி
முல்லை பெரியாறில் புதிய அணை : கேரள அமைச்சர் உறுதி
ADDED : ஆக 16, 2024 02:45 AM

மூணாறு,“தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும்,” என, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் பேசினார்.
கேரளாவின் இடுக்கி ஐ.டி.ஐ., மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதில், கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:
இந்தியா மதச்சார்பின்மை அடிப்படையில் ஒற்றுமையுடன் இயங்குகிறது. இந்த ஒற்றுமை நாட்டை பலப்படுத்துகிறது. மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டோம். இடுக்கி மாவட்டம் இயற்கை பேரிடர் சவால்களை பெரிதும் எதிர்கொண்டுள்ளது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை வேண்டும் என்பது நம் கோரிக்கை.
தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய அணை கட்ட வேண்டும். அணை பெயரில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கூறி, அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கேரளாவில் வலுத்துள்ள நிலையில், அணை பலமாக உள்ளதாக ஆய்வு செய்த நிபுணர் குழுக்கள் தெரிவித்துள்ளன.
எனினும், அங்கு புதிய அணை கட்டக்கூடாது என, தமிழக அரசு மற்றும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.