ADDED : மே 10, 2024 10:52 PM

கலபுரகி : கலபுரகி அருகே வாலிபரை கொன்று உடலை கிணற்றில், மர்ம நபர்கள் வீசி உள்ளனர். காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததால், கொலை நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
கலபுரகி அப்சல்பூர் சங்கபூர் கிராமத்தில் வசித்தவர் ஜாவித் சின்னமாலி, 27. நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்து வெளியே சென்றார். இரவில் வீடு திரும்பவில்லை. மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை சங்கபூர் கிராமத்தில் உள்ள கிணற்றில், ஜாவித் பிணமாக மிதந்தார். கங்காபூர் போலீசார் அங்கு சென்றனர். கிணற்றின் பக்கத்தில் மது பாட்டில்களும் கிடந்தன. இதனால் மதுவிருந்திற்கு பின்னர், ஜாவித்தை மர்மநபர்கள் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியது தெரிந்து உள்ளது. கொலையாளிகள் யார், என்ன காரணம் என்று தெரியவில்லை.
லோக்சபா தேர்தலில், கலபுரகி காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணா தொட்டமணிக்கு ஆதரவாக, ஜாவித் பிரசாரம் செய்தார்.
இதன் காரணமாக அவர் கொல்லப்பட்டு இருப்பதாக, ஜாவித் குடும்பத்தினர், கங்காபூர் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடக்கிறது.