லெபனானில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு
லெபனானில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு
ADDED : நவ 19, 2025 08:16 AM

பெய்ரூட்: தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருப்பினும், லெபனானின் தெற்கில் 5 இடங்களில் இஸ்ரேல் தனது படைகளை நிறுத்தியுள்ளது. அங்கிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது இஸ்ரேல் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இஸ்ரேல் படைகள் குவிக்கப்பட்டிருக்கும் லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து ஆயுதங்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் குறைக்க வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். ஹமாஸிற்கான பயிற்சி மையமாக அகதிகள் முகாம் செயல்பட்டு வந்தது.
ஹமாஸ் எங்கு வேலை செய்தாலும் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து ஹமாஸ் அமைப்புக்கு எதிராகச் செயல்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

