'பயங்கரவாத விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் கூடாது' அமைச்சர் ஜெய்சங்கர் காட்டம்
'பயங்கரவாத விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் கூடாது' அமைச்சர் ஜெய்சங்கர் காட்டம்
ADDED : நவ 19, 2025 07:49 AM

மாஸ்கோ: 'பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருப்பதோ, கண்துடைப்பு நாடகம் ஆடுவதோ கூடாது' என நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உலக நாடுகளை வலியுறுத்தி உள்ளார்.
எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பி ன் வெளி யுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம், ரஷ்யாவில் நடக்கிறது.
நேற்று நடந்த கூட்டத்தில் நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிராக நம் மக்களைப் பாதுகாக்கும் உரிமை நமக்கு உண்டு. இந்தியா நிரூபித்திருப்பதுபோல, மற்ற நாடுகளும் அதை செய்து காட்ட வேண்டும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை ஒழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு களில் இந்த அச்சுறுத்தல்கள் இன்னும் தீவிர மடைந்துள்ளன.
எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
அதற்கு எந்தவிதமான நியாயமும் கற்பிக்கக்கூடாது. கண்டு காணாமல் இருப்பதோ, கண்துடைப்பு நாடகமோ கூடாது.
மாறி வரும் உலகளாவிய நிலப்பரப்புக்கு ஏற்ப ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை மாற்றியமைப்பதுடன் அதனை விரிவு படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

