அமெரிக்கா உலக கோப்பை கால்பந்து விசாவில் முன்னுரிமை
அமெரிக்கா உலக கோப்பை கால்பந்து விசாவில் முன்னுரிமை
ADDED : நவ 19, 2025 07:47 AM

நியூயார்க்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக, சிறப்பு விரைவு விசா வழங்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் அடுத்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்க இருக்கிறது. அமெரிக்காவில் நடக்கும் போட்டியை காண தற்போதே லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
டிரம்பின் விசா கட்டுப்பாடுகள் கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்களை பாதிக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் 'பிபா' எனப்படும் சர்வதேச கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜியான்னி இன்பான்டினோ உடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், 'பிபா பாஸ்' என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், பிபா மூலம் நேரடியாக டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு விசா நேர்காணலில் முன்னுரிமை அளிக்கப்படும். ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

