மம்தாவை மக்கள் கங்கையில் மூழ்கடிப்பர்; மத்திய அமைச்சர் மஜூம்தார் பேட்டியால் சர்ச்சை
மம்தாவை மக்கள் கங்கையில் மூழ்கடிப்பர்; மத்திய அமைச்சர் மஜூம்தார் பேட்டியால் சர்ச்சை
ADDED : ஆக 26, 2024 11:13 AM

கோல்கட்டா: 'மக்கள் மம்தாவை ஆட்சியில் இருந்து அகற்றி, கங்கையில் மூழ்கடிப்பார்கள்' என மத்திய அமைச்சரும், மேற்கு வங்க பா.ஜ., மாநில தலைவருமான சுகந்தா மஜூம்தார் தெரிவித்தார்.
மம்தாவிடம் விசாரணை
மேற்குவங்கத்தில் நிருபர்கள் சந்திப்பில், சுகந்தா மஜூம்தார் கூறியதாவது: கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முதல்வர் மம்தா பானர்ஜியிடம் விசாரணை நடத்த வேண்டும். மம்தாவின் தொலைபேசியை பறிமுதல் செய்ய வேண்டும். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் இடம் விசாரணை அவசியம். மக்கள் மம்தாவை ஆட்சியில் இருந்து அகற்றி, கங்கையில் மூழ்கடிப்பார்கள்.
போராட்டம்
மக்களின் குரலை அரசு நசுக்க நினைக்கிறது. ஆனால், மேற்கு வங்க மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர். பயிற்சி பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 28ம் தேதி மேற்கு வங்க மகளிர் கமிஷன் அலுவலகத்தில் பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி ஆகஸ்ட் 29ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், அரசு அலுவலகங்களுக்கு வெளியே போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

