ADDED : ஜூலை 03, 2024 10:20 PM

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன், ஷராவதி ஆற்று பகுதியில் மூழ்கிய கொரடுகல்லு பாலம், இன்றைக்கும் வலுவாக உள்ளது. தன் இயல்பான ஆழகால், சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது.
கர்நாடகாவில், வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்கள், நினைவு மண்டபங்கள் மட்டுமின்றி, பாலங்களும் ஏராளமாக உள்ளன. இன்றைய நவீன தொழில்நுட்பங்களுக்கு சவால் விடும் வகையில், வலுவாக உள்ளன. இவற்றில் கொரடுகல்லு பாலமும் ஒன்றாகும்.
ஷிவமொகா, ஹொசநகரின், நிட்டூரின், பென்னட்டி அருகில் கொரனகல்லுவில், ஷராவதி ஆற்றில், பல ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பல்வேறு கிராம மக்களுக்கு உதவியாக இருந்தது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு செல்ல, பெரிதும் பயன்பட்டது.
நிட்டூரு சுற்றுப்பகுதி மக்கள், ஹொசநகரை தொடர்பு கொள்ள பாலத்தை பயன்படுத்தினர். 60 ஆண்டுகளுக்கு முன், ஷராவதி ஆற்றுக்கு குறுக்கே லங்கனமக்கி அணை கட்டிய போது, நீரில் மூழ்கிய பகுதிகளில் கொரடுகல்லு பாலமும் ஒன்றாகும். கோடைக் காலங்களில் அணையில் தண்ணீர் வற்றினால் மட்டுமே, பாலத்தை காண முடியும்.
நடப்பாண்டு மே மாதம், அணை பகுதியில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், மைதானம் போன்று தென்படுவதால், கொரனகல்லு பாலத்தின் தரிசனம் கிடைத்துள்ளது.
சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. 60 ஆண்டுகளுக்கு மேலாக, நீரில் மூழ்கி இருந்தும் பாலத்தின் எந்த பகுதியும் சேதமடையவில்லை. அதன் அழகு மற்றும் இயல்பு தன்மை சிறிதும் குறையவில்லை. பாலத்தின் வடிவமும் அப்படியே உள்ளது.
பாலத்தின் கூப்பிடு துாரத்தில் உள்ள, ஷிவமொகா மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களின் எல்லை பகுதியை அடையாளம் காணும் கற்களும் தென்படுகின்றன.
பென்னட்டி புண்ணிய தலத்தின் கவுரி தீர்த்தத்தில் இருந்து, பாய்ந்து வரும் நீர், மடோடியில் இருந்து பாய்ந்து வரும் சிறிய ஆறுகள், கொருடுகல்லுவில் சங்கமமாகின்றன.
தற்போது நீர் மட்டம் குறைந்ததால், கொரடு கல்லு பாலம் உட்பட, வரலாற்று சின்னங்கள் கண்களுக்கு தெரிகின்றன. இவற்றை காண சுற்றுலா பயணியர், பெருமளவில் வருகின்றனர். குறிப்பாக வரலாற்று பாலத்தை கண்டு ஆச்சர்யமடைகின்றனர்.
- நமது நிருபர் -