ADDED : ஆக 05, 2024 09:48 PM

நமக்கு பொருளாதார கஷ்டம் ஏற்படும் போதெல்லாம், மஹாலட்சுமி நமது வீட்டிற்கு வர வேண்டும், துன்பம் நீங்கி, இன்பம் பொங்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொள்கிறோம்.
அத்தகைய துன்பங்களை போக்கும் மஹாலட்சுமி கோவில், துமகூரு மாவட்டம், கொரட்டகெரே தாலுகா, கொரவனஹள்ளியில் அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து 88 கி.மீ., துாரத்தில் உள்ளதால், 2 மணி நேரத்தில் கோவிலுக்கு சென்று விடலாம்.
செல்வத்தை கொடுப்பவர் மஹாலட்சுமி என்பதால், தினமும் பக்தர்கள் கூட்டத்தால் கோவில் நிரம்பி வழியும். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலைமோதும்.
உள்ளூர் வரலாற்று ஆராய்ச்சியாளர்களின்படி, 1900களில் அப்பய்யா என்பவர், மஹா லட்சுமியின் விக்ரஹத்தை வீட்டிலேயே பிரதிஷ்டை செய்துள்ளார். இவர் கடவுளிடம் வேண்டி கொண்டதன் பலனை அடைந்து செல்வ செழிப்புடன் ஆனதால், விக்ரஹம் பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது.
ஒரு நாள் இரவு அந்த கடவுளே அப்பய்யாவின் சகோதரர் தோட்டதப்பாவின் கனவில் தோன்றி, தனக்கு கோவில் நிறுவும்படி கேட்டாராம்.
இதையடுத்து, கோவில் கட்டி வழிபட்டு வந்ததாக நம்பப்படுகிறது. இவர்களது மறைவுக்கு பின், சவுடய்யா என்பவர் பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார்.
ஆனால், 1910 முதல், 1925 வரை கோவிலின் வரலாறு தெரியவில்லை. 1925ல், கமலம்மா என்பவர் கொரவனஹள்ளிக்கு வந்து கோவிலின் நிலையை கண்ட போது, வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. சரியாக பராமரிக்கப்படவில்லை. அப்போது, உள்ளூர் வாசிகளுடன் இணைந்து, சீரமைத்து உயிர்ப்பித்துள்ளார்.
திடீரென ஒரே ஆண்டில் அவர், கோவிலை விட்டு வெளியேறினார். பின், 26 ஆண்டுகள் கழித்து, 1952ல் கமலம்மா மீண்டும் வந்து, கோவிலை சீரமைத்துள்ளார். அதன்பின், பக்தர்கள் வர ஆரம்பித்துள்ளனர். மஹாலட்சுமி கோவில் பிரபலமடைந்து, புனித தலமாக மாறியது.
கோவிலின் இருபுறமும் சிறிய வளைவுகளுடன் கூடிய, பெரிய ராஜகோபுரம் உள்ளது. உள்ளே சென்றவுடன் இறபுறமும் பெரிய வராண்டாக்கள் உள்ளன. மூலவர் மஹாலட்சுமியுடன், ஓனி நாகப்பா, மாரிகாம்பா சன்னிதிகளும் அமைந்துள்ளன.
ஆண்டுதோறும் நவராத்திரிக்கு பின், இங்கு நடக்கும் லட்ச தீப உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றவை.
அன்றைய தினம் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தீபம் ஏற்றி வழிபடுவர். சுவர்ணமுகி கடற்கரையை ஒட்டி கோவில் அமைந்துள்ளதால், மழை காலங்களில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம்.
இந்த கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரையிலும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தினமும் காலை 8:00 மணி முதல் 9:30 மணி வரை குங்கும அர்ச்சனை, அபிஷேகம்; காலை 9:30 மணி, நண்பகல் 12:30 மணி; இரவு 7:30 மணி என மூன்று வேளைகளில் தீபாராதனை காண்பிக்கப்படும்.
- நமது நிருபர் -