ADDED : ஜூன் 16, 2024 10:59 PM

ராம்நகர்: ''மத்திய அமைச்சர் குமாரசாமியின் ஆசி, எங்களுக்கு வேண்டும்,'' என கூறியதன் மூலம், சென்னபட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, பா.ஜ., தலைவர் யோகேஸ்வர், 'துண்டு' போட்டுள்ளார்.
ராம்நகரின், சென்னபட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் குமாரசாமி. இவர் லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட்டார். அமோக வெற்றி பெற்றதுடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், கனரக தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார்.
இவரால் காலியான சென்னபட்டணா தொகுதியில், பலர் கண் வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர், பா.ஜ., போட்டியிட ஆர்வம் காண்பிக்கிறார். குமாரசாமியின் நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்.
ராம்நகரில் நேற்று யோகேஸ்வர் அளித்த பேட்டி:
முன்னாள் பிரதமர் தேவகவுடா மீது, பிரதமர் நரேந்திர மோடி அபார மதிப்பு வைத்துள்ளார். குமாரசாமி தேசிய அரசியலுக்கு சென்றுள்ளார். அவர் எங்கள் மாவட்டத்திலும் இருக்க வேண்டும்; அவரது ஆசி எங்கள் மீது இருக்கட்டும்.
குமாரசாமி மீது நம்பிக்கை வைத்து, பிரதமர் பெரிய பொறுப்பை அளித்துள்ளார். தேவகவுடா பிரதமரான போது, நான் ஒரு ரயில் முழுதும், மக்களை டில்லிக்கு அழைத்து சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.