குமாரசாமியும் சிறைக்கு செல்வார் காங்., - எம்.எல்.ஏ., உதய் சாபம்
குமாரசாமியும் சிறைக்கு செல்வார் காங்., - எம்.எல்.ஏ., உதய் சாபம்
ADDED : மே 12, 2024 09:54 PM

மாண்டியா: 'ரேவண்ணாவின் சூழ்நிலையே, குமாரசாமிக்கும் ஏற்படும். இவர் சிறைக்கு செல்லும் காலம் நெருங்குகிறது,'' என மத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கதலுார் உதய் தெரிவித்துள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:
ரேவண்ணாவுக்கு ஏற்பட்ட கதியே, குமாரசாமிக்கும் ஏற்படும். இவரும் உத்தமர் இல்லை. இவர் மீதும் பெண்கள் புகார் அளிப்பார். பல பெண்களை குமாரசாமி பாலியல் பலாத்காரம் செய்ததை பற்றி, நான் கேள்விப்பட்டேன். இவர் சிறைக்கு செல்லும் காலம் அருகில் வந்துள்ளது.
திருமணம் செய்து கொண்ட ராதிகாவை, மனைவியாக குமாரசாமி பார்க்கிறாரா. இத்தனை நாட்களாக புகார் அளிக்க பெண்களுக்கு தைரியம் இருக்கவில்லை. பிரஜ்வல் ரேவண்ணாவின் பென் டிரைவ் வெளிச்சத்துக்கு வந்த பின், குமாரசாமி மீதும் புகார் அளிக்க, பெண்களுக்கு தைரியம் வந்துள்ளது. யாராவது புகார் அளித்தால் குமாரசாமியும் கைதாவார்.
குமாரசாமியும் உத்தமர் இல்லை. தன் மகள் வயதில் உள்ள பெண்ணை ஏமாற்றி, குழந்தையை கொடுத்த பின், அந்த பெண்ணை வீதியில் விட்டுவிட்டார். முதல்வராக இருந்தவர், ஈனத்தனமான செயலை செய்துள்ளார். வாழ்க்கை முழுதும் பிளாக் மெயில் செய்கிறார், அவப்பிரசாரம் செய்கிறார். மற்றவரை மூழ்கடித்ததே, இவரது சாதனை. பெண்களின் கவுரவம் பாதிக்கப்பட்ட போது, இவர் போராட்டம் நடத்தினாரா. தனக்கு தேவையானதை மட்டும் செய்வார்.
எம்.பி., பிரஜ்வல் வீடியோவை, அரசு தயாரித்ததா. அவரே வீடியோ பதிவு செய்துள்ளார். பிரஜ்வல் ம.ஜ.த., - எம்.பி.,யாக இருக்கிறார். இந்த கட்சி ஒரு குடும்ப கட்சியாகும். இது ஒரு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் தொண்டர்களை துாண்டி விட்டு, போராட்டம் நடத்த வைக்கிறார். இதற்காக குமாரசாமி மக்கள் முன்னிலையில், மன்னிப்பு கேட்க வேண்டும்.
துணை முதல்வர் சிவகுமாரை பற்றி, அவப்பிரசாரம் செய்கின்றனர். பெண்களுக்கு அநியாயம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக, ம.ஜ.த., தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை. ஆறுதலும் கூறவில்லை. இவர்கள் வீட்டின் பெண்களாக இருந்தால், இப்படி செய்திருப்பரா. காங்கிரஸ் அரசை மோசமான அரசு என்கின்றனர். ஏழைகளுக்காக திட்டங்களை செயல்படுத்திய அரசு, மோசமான அரசா?
இவ்வாறு அவர் கூறினார்.