பீஹார் முதற்கட்ட தேர்தல் நிறைவு 64.46 சதவீதம் ஓட்டு பதிவு
பீஹார் முதற்கட்ட தேர்தல் நிறைவு 64.46 சதவீதம் ஓட்டு பதிவு
ADDED : நவ 07, 2025 06:03 AM

பாட்னா: பீஹார் சட்டசபைக்கு நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலில், கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 64.46 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
பீஹாரில், மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடக்கின்றன. இதில், 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்தது.
ஆர்வம்
இதில், பாட்னா, வைஷாலி, முங்கேர், நாலந்தா, போஜ்பூர் உட்பட, 18 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரை நடந்தது.
பக்தியார்பூர், மகிஷி உட்பட 50க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில், பாதுகாப்பு காரணங்கள் கருதி மாலை, 5:00 மணிக்கே ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.
முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், ராஜிவ் ரஞ்சன் சிங், நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் தங்கள் தொகுதி களில் ஓட்டு செலுத்தினர்.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், 'மஹாகட்பந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், குடும்பத்துடன் வந்து ஓட்டளித்தார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் ஓட்டளித்தார்.
பெரும்பாலான தொகுதிகளில், காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். வழக்கத்தைவிட, இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.
மாலை 5:00 மணி வரை, 60.18 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடைசி நேரத்திலும், பலர் காத்திருந்து ஓட்டளித்த நிலையில், முதற்கட்ட தேர்தலில் 64.46 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 73 ஆண்டுகளுக்கு பின், அதிகளவு ஓட்டுப்பதிவு இந்த முறை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முடிவு அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவாக, 67.32 சதவீத ஓட்டுகள் பதிவானது.
இரண்டாம் கட்டமாக, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கை, வரும் 14ம் தேதி நடத்தப் பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

