கொள்ளையடிக்கும் கூட்டம் பின்னால் போய்விடாதீர்கள்! நயினார் நாகேந்திரன்
கொள்ளையடிக்கும் கூட்டம் பின்னால் போய்விடாதீர்கள்! நயினார் நாகேந்திரன்
ADDED : நவ 07, 2025 06:15 AM

பல்லடம்: ''கொள்ளையடிக்கும் கூட்டத்தின் பின்னால் போய்விடாதீர்கள்'' என, செஞ்சேரிமலையில் நடந்த விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில், பா.ஜ. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
'தமிழகம் தலை நிமிர' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின், விவசாயிகளுடனான சந்திப்பு கூட்டம், கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, செஞ்சேரிமலையில் நேற்று நடந்தது.
அதில், அவர் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், தொழில் துறையினர், பொதுமக்களை சந்தித்து, அவர்களது நிறை குறைகளை கேட்டறிந்து, அதன்படி, மாநில அளவிலான பொதுக்கூட்டத்தில், அவற்றுக்கான தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கவே, 'தமிழகம் தலை நிமிர' என்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, ஏற்கனவே சட்டசபை கூட்டத்தில் பேசப்பட்டது.
ஆனால், தி.மு.க. அரசு அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்வதாக தெரியவில்லை. கொள்ளையடிக்கும் கூட்டத்தின் பின்னாலேயே தமிழக மக்கள் போய்விடக்கூடாது. விவசாயிகளின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில், மத்திய வேளாண் துறை அமைச்சரை இங்கு அழைத்து வரவோ; அல்லது நீங்கள் விரும்பினால், டெல்லிக்கு உங்களை அழைத்துச் செல்லவோ நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு சார்ந்த விஷயங்களை செய்து தர உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆளும் தி.மு.க. அரசு மக்கள் மீது அக்கறையுடன் செயல்பட்டிருந்தால், நிச்சயமாக ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்தி இருக்க முடியும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், நிச்சயமாக, ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

