முதல்வராக நானே தொடர்வேன் என சித்தராமையா: அமைச்சர்களின் ஆசைக்கு வைத்தார் முற்றுப்புள்ளி
முதல்வராக நானே தொடர்வேன் என சித்தராமையா: அமைச்சர்களின் ஆசைக்கு வைத்தார் முற்றுப்புள்ளி
ADDED : செப் 12, 2024 05:53 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை. எனவே, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியே எழாது. அனைவரும் சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார் என்று கூறியுள்ளனர். எனவே, நானே முதல்வராக தொடருவேன்,'' என, முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்தார். இதன் வாயிலாக, அமைச்சர்களின் முதல்வர் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
'மூடா' முறைகேடு விஷயத்தில் சிக்கியுள்ள முதல்வர் சித்தராமையா மீது, விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். இதனால், எப்போது வேண்டும் ஆனாலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அவர் எப்போது பதவி விலகுவார் என்று பல காங்., தலைவர்கள் ஆவலுடன் காத்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், முதல்வர் பதவிக்கு துண்டு போட்டுள்ளனர். அதுவும் அவருடன் நெருக்கமாக இருக்கும் தலைவர்களே வரிசையில் நிற்கின்றனர்.
* கார்கே, ராகுல்
'எனக்கு தான் முதல்வர் பதவி, நான் தான் மூத்த தலைவர்' என்றெல்லாம் பேசுகின்றனர். இத்தகைய பேச்சுகளால், மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. தொண்டர்களும் பெரும் கவலையில் உள்ளனர்.
இதற்கிடையில், முதல்வர் பதவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசும் அமைச்சர்களை அடக்கி வையுங்கள் என்று, மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோருக்கு தனி தனியாக கடிதம் எழுதி உள்ளனர்.
* பா.ஜ., முறைகேடு
இது குறித்து, பெங்களூரில் முதல்வர் சித்தராமையா, நேற்று கூறியதாவது:
முந்தைய பா.ஜ., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து நடந்து வரும் விசாரணைகளை கண்டறிந்து, ஒருங்கிணைப்பதற்காக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், அமைச்சர்கள் கிருஷ்ணபைரே கவுடா, பிரியங்க் கார்கே, சந்தோஷ் லாட், ஹெச்.கே.பாட்டீல் ஆகியோர் உள்ளனர். இந்த குழு, அறிக்கை தாக்கல் செய்ய, இரண்டு மாதங்கள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ., தேர்வு, 40 சதவீதம் கமிஷன், கொரோனா, பிட் காயின் ஆகிய முறைகேடுகளுக்கு மட்டுமே விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கொரோனா முறைகேடு குறித்து மட்டுமே, விசாரணை கமிஷனின் முதல் கட்ட அறிக்கை வந்துள்ளது. இதை அதிகாரிகள் பரிசீலனை செய்த பின், அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
* விரோத அரசியல்
பா.ஜ.,வினர் என் மீது விரோத அரசியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், நாங்கள் விரோத அரசியல் செய்ய மாட்டோம். அதே வேளையில், தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எஸ்.ஐ., தேர்வு முறைகேடு தொடர்பாக, நடவடிக்கை எடுக்கும்படி, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வால்மீகி மேம்பாட்டு ஆணையம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.
* அரசியல் பரபரப்பு
கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை. எனவே, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியே எழாது. அனைவரும் சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார் என்று கூறியுள்ளனர். எனவே நானே முதல்வராக தொடருவேன். இதில் எந்த விதமான சந்தேகமும் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் வாயிலாக, முதல்வர் பதவி மீதான மூத்த அமைச்சர்களின் ஆசைக்கு சித்தராமையா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
...பாக்ஸ்...
முதல்வர் பதவிக்கு
நானும் உள்ளேன்!
காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா தாவணகெரேவில் நேற்று கூறியதாவது:
மாநிலத்தில் முதல்வரை மாற்றும் சூழ்நிலை உருவானால், முதல்வர் பதவிக்கு நானும் போட்டியிடுவேன். அரசியலில் சீனியர், ஜூனியர் என்ற பேச்சுக்கு இடமில்லை. எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கு, பெரும்பான்மை அளிக்கின்றனரோ, அவரை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கும்.
சித்தராமையா நல்லாட்சி அளிக்கிறார். கட்சி மேலிடத்தின் ஆசி உள்ள வரை, அவர் முதல்வராக இருக்கட்டும். சிலர் வாய்க்கு வந்தபடி பேசுவதால் எந்த பயனும் இல்லை. முதல்வர் பதவிக்கு நானும் போட்டியிட மாட்டேன். ஆனால், வாய்ப்பு வந்தால் விடமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
...புல் அவுட்...
சர்ச்சை தலைவர்களுக்கு கடிவாளம்
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பெங்களூரில் கூறியதாவது:
முதல்வர் பதவி குறித்து பேசுவது தேவையற்றது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அமல்படுத்தும் நோக்கில், நிர்வாகம் செய்ய வேண்டும். பா.ஜ.,வினர் விரோத அரசியல் செய்கின்றனர்.
அரசை கவிழ்க்கவும், அரசு திட்டங்களை அமல்படுத்த கூடாது என்ற நோக்கிலும் செயல்படுகின்றனர். இதை ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, பணியாற்ற வேண்டும்.
முதல்வர் பதவி குறித்து பேசியவர்களுக்கு கட்சி தலைவர்கள் கடிவாளம் போடுவார். மாநில தலைவர் சிவகுமார் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் உள்ளார். வந்த பின், அவர் பார்த்து கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
***